அயல்தேச பயணம் என்னும் புதுமை நமது நாட்டில் கடந்த காலத்தில் புறத்தே பெருமைக்குறியதாகவும் அகத்தே அச்சத்திற்குறியதாகவும் கருதப்பட்டது. மேற்படிப்புக்காகவும் வேலைவாய்ப்புகளுக்காகவும் அயல் நாடுகளை நோக்கி தினந்தினமும் பயணப்படும் இன்றைய தலைமுறையினருக்கு அக்காலத்தின் பெருமையும் அச்சமும் விசித்திரமாக தோன்றலாம். காலமாற்றத்தின் தடங்களை இன்று நமக்குணர்த்தும் சான்றுகளாக இருப்பவை இலக்கிய பிரதிகள் மட்டுமே. கன்னட நாடக ஆசிரியரான கிரீஷ் கார்னாட் சமூக பின்னனியில் எழுதிய நாடகங்களில் ‘அஞ்சும் மல்லிகை’ மிக முக்கியமானது. அஞ்சும் மல்லிகைகளாக வெளிநாட்டுக்குச் சென்ற அக்காலத்து இளந்தலைமுறையினரின் குழப்பங்களையும் கனவுகளையும் இன்பங்களையும் துன்பங்களையும் சிறுசிறு காட்சிகளாக முன்வைக்கிறது நாடக பிரதி. ஒரு புறம் நிறவேற்றுமையால் உருவாகும் கசப்புகளுக்கும் தடுமாற்றங்களுக்கும், மறுபுறம் பால்யத்தின் நிகழ்ந்த பாலியல் பிறழ்வனுபவத்தை நினைத்து வதைபடுவதால் நேரும் நிலைகுலைவுகளுக்கும் இடையில் வாழ்க்கை ஊசல் ஆடுகிறது.