சார்வாகன், அவர் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்தில் வேறு எந்த எழுத்தாளரோடும் ஒப்பிட முடியாத தனி வகையைச் சேர்ந்த படைப்பாளியாகத் தன்னை நிலைநிறுத்திக்கொண்டவர். அவருடைய முன்னோடி என்று காட்டக்கூடிய எழுத்தாளர் எவரும் அவருக்கு முந்தைய தலைமுறையில் இல்லை. ஆனால் அவரது சமகாலத்தின் எல்லா உன்னதமான எழுத்தாளரிடமும் காணப்பட்ட ஒற்றுமைகள் சார்வாகனிடமும் காணக்கிடைக்கின்றன. முதலில் சொல்லப்பட வேண்டிய குணாம்சம் கதைகளில் வெளிப்படும் தன்முனைப்பற்ற தன்மை. அடுத்ததாக மொழித்தேர்ச்சியின் விளைவாக அமைந்த பிழையற்ற செறிவான உரைநடை; பொருத்தமான சொற்தேர்வு. மிகச் செழுமையான தமிழ் சார்வாகனுடையது. சார்வாகன்: சார்வாகன் (1929 – 2015) நவீனத் தமிழ் இலக்கியப் பரப்பில் வீரியமான கதைகளின் மூலம் அறிமுகமானவர். இயற்பெயர் ஹரி ஸ்ரீனிவாசன். நீண்டகாலம் மருத்துவராகப் பணியாற்றினார். தொழுநோய் மருத்துவத்துறையில் உலகப் புகழ்பெற்ற அறுவை சிகிச்சை நிபுணர். இவரது சேவையை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச ‘மகாத்மா காந்தி விருது’, ‘பத்மஸ்ரீ விருது’ உட்படப் பல விருதுகள் இவருக்கு வழங்கப்பட்டன. சார்வாகன் சிறுகதைகள் ‘தாமரை’, ‘தீபம்’, ‘கணையாழி’ உள்ளிட்ட இதழ்களில் வெளிவந்தவை. வெளிவந்த காலத்திலேயே நுட்பமான வாசகர்களின் வரவேற்பைப் பெற்றவை. இவரது ‘கனவுக் கதை’, 1971ஆம் ஆண்டில் சிறந்த சிறுகதையாக ‘இலக்கியச் சிந்தனை’ அமைப்புக்காக சுந்தர ராமசாமியால் தேர்ந்தெடுக்கப்பட்டது.