உலகெங்கும் பொதுவாகவுள்ள மனித உணர்வுகளைத் துல்லியமாகவும் நுணுக்கமாகவும் கலையம்சம் குலையாமல் அங்கதத்துடன் வெளிக்கொணரும் சிறுகதைகளை அடக்கியது இத்தொகுப்பு. நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் வீச்சையும் சேர்க்கும் ஆசிரியரின் கதை நிகழ்புலங்கள் இலங்கை, அமெரிக்கா, ஆப்பிரிக்கா, கனடா என மாறினாலும் கதை மாந்தர்களின் மனிதநேசமும் மகிழ்ச்சியும் துயரமும் தியாகமும் ஏமாற்றமும் இடர்ப்பாடுகளும் மாறுவதில்லை. ஒரு தமிழ் வாசகருக்கு முற்றிலும் பரிச்சயமில்லாத களங்களில் நிகழும் இக்கதைகள் வாழ்வின் வியப்பும் விரக்தியும் நெகிழ்ச்சியும் நம்பிக்கையும் அழகும் அபத்தமும் நிறைந்த தருணங்களை வாசக மனத்தில் நீடித்து நிறுத்தும். அ. முத்துலிங்கம்: அ. முத்துலிங்கம் (பி. 1937) அ. முத்துலிங்கம் இலங்கையின் கொக்குவில் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். கொழும்பு பல்கலைக்கழகத்தில் விஞ்ஞானப் படிப்பை முடித்தபின், இலங்கையின் சாட்டர்ட் அக்கவுன்டன்ட் படிப்பையும் இங்கிலாந்தின் சாட்டர்ட் மனெஜ்மெண்ட் படிப்பையும் பூர்த்திசெய்து இலங்கையிலும் ஆப்பிரிக்காவிலும் இன்னும் பல நாடுகளிலும் ஐ.நாவுக்காகப் பணிபுரிந்தவர். 2000இல் ஓய்வுபெற்று, மனைவி ரஞ்சனியுடன் கனடாவில் வசிக்கிறார். பிள்ளைகள்: சஞ்சயன், வைதேகி. வைதேகியின் மகள்தான் அடிக்கடி இவர் கதைகளில் வரும் அப்ஸரா. அறுபதுகளில் எழுத ஆரம்பித்து இன்றும் இவருடைய பணி தொடர்கிறது. சிறுகதை, கட்டுரை, நேர்காணல், நாடகம், விமர்சனம், நாவல் என எழுதிவருகிறார்.