காவேரியின் இந்நாவல் பெண்ணின் இடம் எதுவென்ற கேள்வியை மைய மாகக்கொண்டு விரிவடைகிறது. வீடு என்ற அமைப்பில் பெண்ணுக்குள்ள வாய்ப்பையும் உரிமையையும் ஆராய்கிறது. வீடு, பொதுவாக ஒரு வசிப்பிடம். ஆனால் பெண்ணுக்கு? பெண்தான் வீட்டை அமைக்கிறாள். அது அவளுடைய சௌகரியங்களுக்கல்ல. ஆணுக்கும் குழந்தைகளுக்கும்தான் இடம் தருகிறது. ஏன்? வீட்டின் பௌதிக மதிப்பையும் பெண்தான் உயர்த்துகிறாள். ஆனால், அந்த மதிப்பில் மரபுரிமை கோர அவளுக்கு வழியில்லை. எதனால்? நாம் நமது உடலில் குடியிருப்பது போல வீட்டுக்குள் குடியிருக்கிறோம். எனினும் பெண்ணுக்கு அந்த இருப்பு எட்டாப் பொருள். எப்படி? நாவலின் மையப் பாத்திரமான காயத்ரி எழுப்பும் இந்த மும்முனைக் கேள்விகளுக்கும் அவள் தாய் மீனாட்சி தனது வழியிலும் அணுகுமுறையிலும் விடை காண்கிறாள். வீடு ஒரு பாதுகாப்பு, ஒரு பாலைவனச் சோலை என்று புரிய வைக்கிறாள். காவேரி: காவேரி காவேரி என்ற பெயரில் எழுதிவரும் லக்ஷ்மி கண்ணன் இரு மொழிப் புலமை பெற்றவர். கவிஞர், சிறுகதையாளர், நாவலாசிரியர். தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதுபவர். இரு மொழிகளிலுமாக 21 புத்தகங்களை வெளியிட்டுள்ளார். தேசிய, சர்வதேச இலக்கிய, பண்பாட்டு அமைப்புகளின் எழுத்தாளர் உறைவிடத் திட்டங்களிலும் பன்னாட்டுக் கருத்தரங்கங்களிலும் புத்தகக் காட்சிகளிலும் பங்கேற்றிருப்பவர். பாலின ஆய்வுத் துறை சார்ந்தும் கட்டுரைகள் எழுதிவருபவர். காவேரியின் தமிழ்ச் சிறுகதைகளின் இந்தி மொழிபெயர்ப்பு பென்குவின் நிறுவனத்தாரால் வெளியிடப்பட்டுள்ளது. தில்லியில் வசிக்கிறார்.