சமூக வலைதளங்களின் உபயத்தால் திரைப்படங்கள் பற்றிய உரையாடல்கள் பொதுவெளியில் பெருகிவிட்ட காலம் இது. பெரும்பாலான படங்களைப் பற்றிய அலசல்களும் தீர்ப்புகளும் படங்கள் வெளியான சில மணிநேரங்களிலேயே வெள்ளமாகப் பெருகும் காலம். இவ்வளவு தெறிப்புகளுக்கு மத்தியில் காத்திரமான பார்வைகளையோ ஆழமான அலசல்களையோ கண்டுபிடிப்பது அவ்வளவு எளிதல்ல. மரபார்ந்த ஊடகங்களும் திரைப்படங்களைப் பெரிதும் மேலோட்டமாகவே அணுகுகின்றன. திரைப்படங்களைப் போலவே திரை விமர்சனங்களுக்கும், நிலைப்படிவங்களும் தேய்வழக்குகளும் கணிசமாக உருவாக்கி விட்டிருக்கின்றன. திரைப்படத்தைக் கலாபூர்வமாக அலசும் அணுகுமுறையை இடைநிலை இதழ்களிலும் சிற்றிதழ்களிலும்தான் அதிகம் காண முடிகிறது. அத்தகைய அலசல்களைக் கொண்ட இந்தத் தொகுப்பு அதனாலேயே முக்கியத்துவம் பெறுகிறது. தமிழ்ப் படங்கள் எப்படியிருக்கின்றன என்பதோடு, அவை ஏன் அப்படியிருக்கின்றன என்பதையும் சேர்த்து ஆராய முற்படும் கட்டுரைகள் இந்தத் தொகுப்பில் உள்ளன. சமகாலத் திரைப்படங்கள் குறித்த தெளிவைச் சற்றேனும் கூர்மைப்படுத்தவும் ஆழமாக்கவும் இந்தக் கட்டுரைகள் உதவக்கூடும் என்பதே இந்நூலின் சிறப்பு.