நவீன தமிழ்ப் புனைகதைகளில் கவனம் பெறாமல் போய்க் கைக்குத் திரும்பிய பொக்கிஷம் ப. சிங்காரத்தின் ‘கடலுக்கு அப்பால்’. முதல் நாவலாக எழுதப்பட்டும் இரண்டாம் நாவலாகக் கருதப்பட்டும் அவலமும் இதற்கு நேர்ந்திருக்கிறது. கைப் பிரதியாக நீண்டகாலம் கிடப்பில் இருந்த இந்நாவல் 1959ஆம் ஆண்டு ‘கலைமகள்’ நாவல் போட்டியில் பரிசு பெற்றதோடு இலக்கிய உலகின் பார்வைக்கு வந்தது. எனினும் குறுகிய வட்டத்துக்குள்ளேயே முடங்கியது. புதிய வாசிப்பு ஆர்வத்தின் விளைவாக பரவலான கவனிப்புக்கும் ஏற்புக்கும் இன்று இலக்காகியிருக்கிறது. காலம் கனிந்து திருப்பியளித்த கொடை இந்தச் செம்படைப்பு. கடல் கடந்த களத்தில் நிகழ்ந்த வாழ்வை வலுவுடனும் தெளிவுடனும் சித்தரிக்கும் ‘கடலுக்கு அப்பால்’ நாவலைத் தமிழில் புலம்பெயர் புனைவெழுத்தின் முன்மாதிரிகளில் ஒன்றாகச் சொல்லலாம். ப. சிங்காரம்: ப. சிங்காரம் (1920 – 1997) ‘புயலிலே ஒரு தோணி’, ‘கடலுக்கு அப்பால்’ ஆகிய நாவல்களின் மூலம் இலக்கிய வாசகர்களிடம் அறிமுகமான ப. சிங்காரம் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டம் சிங்கம்புணரியில் கு.பழனிவேல் நாடார் அவர்களின் மூன்றாவது புதல்வராக 12.08.1920இல் பிறந்தவர். இவரது பாட்டனார் ப. குமாரசாமி நாடார் அவர்களும், இவரது தந்தையும் சிங்கம்புணரியில் ஜவுளி வியாபாரம் செய்து வந்தனர். சிங்கம்புணரி தொடக்கப்பள்ளியிலும் மதுரை செயிண்ட் மேரிஸ் உயர்நிலைப் பள்ளியிலும் பயின்றார். 1938இல் இந்தொனேசியா சென்று, சின்னமுத்து பிள்ளை என்பவரது கடையில் பணிபுரிந்தார். 1940இல் தாயகம் வந்து மறுபடியும் இந்தொனேசியாவில் மராமத்துத் துறை அலுவலகத்தில் பணியாற்றினார். அந்நேரம் தென்கிழக்காசிய போர் மூண்டது. போர் முடிந்ததும் இந்தொனேசிய ராணுவ அரசின் அனுமதி பெற்று, தமிழர் சிலருடன் சேர்ந்து பினாங்குக்குக் கப்பலில் சரக்குகளை ஏற்றி வியாபாரம் செய்தார். 1946 செப்டம்பரில் இந்தியா திரும்பி, 1947 முதல் 1987வரை மதுரை தினத்தந்தி நாளிதழில் பணியாற்றி, ஓய்வு பெற்றார். 30.12.1997இல் மதுரையில் காலமானார். மதுரை ஒய்எம்சிஏ தங்குமிடத்தில் 50 ஆண்டுகள் தனியாக வாழ்ந்தார் ப.சிங்காரம். முடிவில், மதுரை நாடார் மஹாஜன சங்கத்தின் நாடார் மேன்ஷன் தங்குமிடத்திற்கு வந்த மூன்று மாதங்களில் காலமாகிவிட்டார். தனது மொத்தச் சேமிப்பான ஏழு லட்ச ரூபாயையும் நாடார் மஹாஜன சங்கத்திற்கு, ஏழை மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்காக வழங்கிவிட்டார். தனது இறப்பை யாருக்கும் தெரிவிக்க வேண்டியதில்லை எனவும் கூறினாராம்.