நகரமும் பெருநகரமும் ஆதவனின் கதைகளங்கள். மத்தியதர வர்க்க மனிதர்களை அவரது கதை மாந்தர்கள். இந்தக் களத்தில் அந்த மனிதர்கள் வாழ்வின் பொருட்டு மேற்கொள்ளும் செயல்களை சமரசமற்ற விமர்சனத்துடனும் அதே சமயம் பரிவுடனும் வெளிப்படுத்துபவை அவரது கதைகள். உண்மைகளுக்குள் மறைக்கப்படும் போலித்தனங்களையும் பொய்மைகளுக்குள் ஒளிந்திருக்கும் நிஜங்களையும் பகிரங்கப்படுத்தும் கலைப்பார்வை அவருடையது. ஆதவனின் கதைகளிலிருந்து அவருடைய ஆளுமையை எடுத்துக்காட்டும் பதினாறு சிறுகதைகளை கொண்டது இந்தத் தொகுப்பு. ஆதவன்: ஆதவன் (1942 – 1987) கல்லிடைக்குறிச்சியில் பிறந்த ஆதவனின் இயற்பெயர் கே.எஸ். சுந்தரம். இந்திய ரயில்வேயில் சில ஆண்டுகள் பணியாற்றியபின் தில்லியில் உள்ள ‘நேஷனல் புக் டிரஸ்’டின் தமிழ்ப் பிரிவில் துணைப் பதிப்பாசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பெங்களூருக்கு மாற்றலாகி வந்த ஆதவன் 1987 ஜூலை 19ஆம் தேதி சிருங்கேரி துங்கா நதியின் சுழலில் சிக்கி மரணமடைந்தார். அறுபதுகளில் எழுதத் தொடங்கிய ஆதவன், தமிழ்ச் சிறுகதை உலகில் குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர். இவர் எழுதிய ‘முதலில் இரவு வரும்’ என்ற சிறுகதைத் தொகுப்புக்கு சாகித்திய அக்காதெமி (1987) விருது வழங்கப்பட்டது. இவரது பலப் படைப்புகள் இந்திய மொழிகளிலும் ஆங்கிலம், பிரெஞ்ச், ருஷ்ய மொழிகளிலும் பெயர்க்கப்பட்டுள்ளன. மனைவி: ஹேமலதா சுந்தரம் மக்கள்: சாருமதி, நீரஜா