இலங்கையின் முப்பதாண்டுகால இனப்போர்ப் பிரதேசத்துள் நிகழும் புனைவிது. போருக்காகக் கட்டமைக்கப்படும் நியாயப் புனிதங்களின் இருள் ஆழங்களில் புதையுண்ட வரலாற்றுண்மைகளை மானுட அறத்தின் ஒளிமூலம் பேச விழையும் பிரதி. வரலாற்றாசிரியர்கள் பேசத் தயங்குகிற, பேசுவதற்குரிய ஆதாரப் புள்ளிகளை முன்வைக்க முடியாத சூழலில் உருவாகும் இடைவெளிகளை இந்தப் புனைவு நிரப்ப முயல்கிறது. புனைவெழுத்தின் சாத்தியங்களும் அதற்கான துணிவுமே இதனுடைய விரிவும் வலிமையும். உண்மைகள் எங்கும் எந்த ரூபத்திலுமிருக்கும். அவற்றைக் கண்டடைவதே இலக்கியப் பிரதியின் வழி என்ற நம்பிக்கையின் துணிவோடு நிகழும் காலக்கதை. மெய்யும் புனைவுமான கலவையில் துலங்கும் வரலாற்றுப் பாடமிது. உருமறைப்புச் செய்யப்பட்ட உண்மைகளின் கண்களைத் திறந்து நமது கண்களை ஊடுருவிப் பார்க்கும் சாட்சியம். நொயல் நடேசன்: கானல் தேசம் நொயல் நடேசன் (பி. 1954) இலங்கை – யாழ்ப்பாணத்துக்கு மேலே அமைந்திருக்கும் சிறிய தீவுகளில் ஒன்றான எழுவைதீவில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் மிருகவைத்தியத் துறையில் படித்துச் சில காலம் இலங்கையிலேயே பணியாற்றினார். புலம்பெயர்ந்து இந்தியாவிலும் சில காலம் தங்கியிருந்தார். முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக அவுஸ்திரேலியாவில் வாழ்கிறார். தன்னுடைய துறைசார்ந்த அறிவையும் அனுபவத்தையும் மையமாகக் கொண்டு தமிழில் பல வகையான எழுத்துகளை எழுதிவரும் நடேசனுடைய மூன்று நாவல்களில் இரண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பாகியுள்ளன. தவிர, கதைகளையும் அனுபவப் பதிவுகளையும் எழுதியிருக்கிறார்; கூடவே பயணக்கட்டுரைகள் பலவும். உதயம் என்ற பத்திரிகையை 13 ஆண்டுகளாக சவால்கள், எதிர்ப்புகளின் மத்தியில் துணிச்சலோடு அவுஸ்திரேலியாவில் வெளியிட்டார். இதுவரையில் மூன்று நாவல்களும் ஒரு சிறுகதைத் தொகுதியும் வெளிவந்திருக்கின்றன. தொடர்புக்கு: uthayam12@gmail.com.