காலம். இதுதான் கொற்கையின் மையக் கதாபாத்திரம். ஆயிரத்துச் சொச்சம் பக்கங்கள் கொண்ட இந்த நாவல் அளவில் மட்டுமின்றி, தான் தழுவி நிற்கும் காலம், இடம் சார்ந்தும் மாபெரும் நாவலாக வெளிப்பட்டிருக்கிறது. ‘ஆழிசூழ் உலகு’ என்னும் தன் முதல் நாவலின்மூலம் சூழலில் கவனம் பெற்ற ஆர்.என். ஜோ டி குரூஸின் இரண்டாம் நாவல் இது. நூறாண்டுக்கும் மேற்பட்ட காலவெளியில் பயணம் செய்யும் இந்த நாவல், கடல்சார் பரதவர் சமூகத்தின் மாற்றத்தைச் சித்தரிக்கிறது. பிரிட்டிஷ் இந்திய ஆட்சி, கிறித்தவ சமயத்தின் பிரவேசம், சுதந்திரப் போராட்டம், சுதந்திர இந்தியாவில் நிகழ்ந்த மாற்றங்கள், நவீனத்துவத்தின் வருகை ஆகியவை பரதவர் சமுதாயத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைத் துல்லியமாகவும் கலை அமைதியுடனும் சொல்கிறார் ஜோ டி குரூஸ். பல விதமான நிகழ்வுகளையும் மனிதர்களின் வெவ்வேறு முகங்களையும் மாற்றத்தின் வியக்கவைக்கும் கோலங்களையும் நுட்பமான சித்தரிப்பில் வெளிப்படுத்துவதன்மூலம் கலைபூர்வமான வரலாற்று ஆவணமாகவும் திகழ்கிறது இந்த நாவல். நாவல் காலூன்றி நிற்கும் புவியியல் பரப்பிற்குக் கீழ் உள்ளார்ந்து நிற்கும் சூட்சுமப் பரப்பும் அதனூடே உணர்த்தப்படும் வாழ்வின் பரிமாணங்களும் இதைத் தமிழின் முக்கியமான நாவல்களில் ஒன்றாக அடையாளம் காட்டுகின்றன. ஆர்.என். ஜோ டி குருஸ்: ஆர்.என். ஜோ டி குருஸ் (பி. 1964) நெல்லை மாவட்டம் உவரியில் பிறந்தவர். சென்னை லயோலா கல்லூரியில் எம்.ஏ., திருச்சி புனித வளனார் கல்லூரியில் எம்.ஃபில்., பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள்: ‘புலம்பல்கள்’ (கவிதை, 2004), தமிழக அரசின் விருதுபெற்ற ‘ஆழி சூழ் உலகு’ (நாவல், 2004), ‘விடியாத பொழுதுகள்’ (ஆவணப்படம், 2008), ‘Towards Dawn’ (ஆவணப்படம், 2009), ‘எனது சனமே’ (ஆவணப்படம், 2010). வணிகக் கப்பல் நிறுவனம் ஒன்றில் சென்னையில் பணிபுரிகிறார். மனைவி: சசிகலா, மகன்: அந்தோனி டி குருஸ், மகள்: ஹேமா டி குருஸ். மின்னஞ்சல்: rnjoedcruz@gmail.com