உடைபடும் உறவுகள், சீர்கெட்ட மதிப்பீடுகள், எல்லைகள் வகுத்த பிரிவுகள், இயற்கையிலிருந்து முற்றிலும் விலகிய இயந்திர வாழ்வு என எத்தனையோ சங்கடங்களும் சந்தர்ப்பங்களும் எல்லாவற்றையும் கடந்து ஓடிக்கொண்டிருக்கின்றன.
இத்தனைக்கும் நடுவில் நம்பிக்கையுடன் ஒன்று மட்டும் தீவிரத்துடன் அதிர்ந்தபடியே உள்ளது. இப்பயணம் முழுக்க அது தன் வலிமையை இழக்கவில்லை; தடம் மாறவில்லை; தடுமாறவுமில்லை. சக மனிதர்கள் மீதான அக்கறையும் இயற்கை மீதான கரிசனம்கூடிய ஆன்மிகமே அது.
பிரதேச எல்லைகளையும் மொழி வேற்றுமைகளையும் இன பேதங்களையும் கடந்த ஆன்மிகத்தின் குரல் பாவண்ணனின் கதை உலகில் தொடர்ந்து ஒலித்துக்கொண்டிருக்கிறது. இத்தனை இழிவுகளுக்கும் அழிவுகளுக்கும் பிறகும் இவ்வுலகம் வாழத் தகுந்ததாகவே அமையும், அதற்கான சாத்தியங்கள் மனித மனத்தில் குடிகொண்டிருக்கின்றன என்ற பலத்த நம்பிக்கையை பாவண்ணனின் கதைகள் அழுத்தமாக வெளிப்படுத்துகின்றன.