குலசேகரனின் கதையாக்க இயல்பு சில இலக்கிய அடிப்படைகளைச் சுட்டிக் காட்டுகிறது. படைப்புத்தான் முதன்மையானது. அதன் வாயிலாகவே படைப்பாளி அறியப்பட வேண்டும் என்பதை உணர்த்துகிறது. படைப்புச் செயல் வடிவம் பெற்றதும் படைப்பாளியிடமிருந்து விலகித் தனித்து நிலைகொள்கிறது என்பதை எடுத்துக்காட்டுகிறது. படைப்பாளியின் குறுக்கீடுகளையும் பொழிப்புரைகளையும் மீறி வாசிப்புக்காகத் திறந்து கொடுக்கிறது. குலசேகரன் கதைகளின் தனித்துவமான அம்சம் இது. கதையில் ஆசிரியர் எதையும் வற்புறுத்திச் சொல்வதில்லை. வாசக கவனத்தை ஈர்ப்பதற்கான பிரத்தியேகக் கோணங்களை ஒதுக்குவதில்லை. மாறாகக் கதையில் தொடக்கம் முதல் இறுதிவரையான எல்லா வரிகளையும் செறிவானதாக அமைக்கிறார். அதன் வழியாக அனுபவத்தின் பரப்பை விரிவாக்குகிறார். முழுமையான உலகைப் புனைந்து காட்டுகிறார்.