ஓசையின் மூலாதாரம் யாரிடமிருந்து வருகிறது? உயிருள்ளவர்களும் உயிரற்றவையும் இதில் எப்படி ஒன்றிணைகிறார்கள்? பசு, ஆடு, எருமை ஆகியவற்றின் தோல்கள் ஒன்றையொன்று கவனித்து, ஒத்திசைவுடன் வினையாற்றி, ஒருங்கிணைந்து இசை உருவாவது எப்போது நடக்கிறது? ஓசையை உருவாக்குவது யார்? மிருதங்கம் வாசிப்பவர் காதுகளால் மட்டும் தாள கதியை உள்வாங்குவதிலில்லை. தன் உடலின் ஒவ்வொரு பகுதியிலும் அதை உள்வாங்குகிறார். அது வெறும் ஓசை அல்ல. வாசிப்பவரின் விரல்களுக்கும் விலங்குகளின் தோல்களுக்கும் இடையிலான உறவு. வாசிப்பவர் ஒவ்வொரு முறை புதிய கருவியில் வாசிக்கும்போதும் அந்தக் கருவிக்கும் அவருக்கும் இடையே உணர்வுபூர்வமான உறவு உருப்பெறுகிறது. வாசிப்பவர் மிருதங்கத்தைத் தொடுவதற்கு முன்னதாகவே மிருதங்கம் செய்பவர் முறுக்குவது, இழுப்பது, திருகுவது, உடைப்பது, நசுக்குவது, கழுவுவது, வெட்டுவது, இணைப்பது ஆகியவற்றைச் செய்து பல்வேறு இழைகளையும் வண்ணங்களையும் வடிவங்களையும் ஒலிகளையும் ஓரிடத்தில் இணைக்கிறார். மிருதங்கம் செய்பவர் மன்மதன்போல. அவர் இறந்தவற்றையும் உயிரோடு இருப்பவர்களையும், உயிரற்றதையும் செயற்கையான பொருள்களையும் புரிந்து கொள்பவர். இவற்றை இணைப்பதற்கான வழியை அவர் கண்டறிகிறார். அவர் மிருதங்கத்தின் தாளத்தைத் தன் கைகளால் பார்க்கிறார். அறிகிறார், உணர்கிறார். அவர் அதில் முதல் தட்டு தட்டும்போது மிருதங்கம் பிறக்கிறது.