மனதின் இருளுக்குள் இத்தனை சாயைகளா என்பதை நமக்கு உணர்த்துபவை இவரது கதைகள். இருளின் அந்தக் சாயைகளில் பலவும் தஞ்சை ப்ரகாஷ் கதைகளில் உண்டு. பிறழ்வுகளை எழுதாமல் விட்டுவிடுவது வசதியானது. ஆனால், எவ்வளவு பாராமுகம் காட்டினாலும் மனதுக்குள்ளும் சமூகத்துக்குள்ளும் பிறழ்வுகள் இருக்கத்தானே செய்கின்றன. அவற்றை தஞ்சை ப்ரகாஷ் அப்படியே விடுவதில்லை. கண்முன்னால் பிரம்மாண்டமாக வந்து நிற்கும் ‘பிறழ்வு’க்கு முன்னால் பலரும் கண்களை இறுக மூடிக்கொண்டிருக்க அவரோ அந்த ராட்சசத்தைக் கண்கொண்டு அங்குலம் அங்குலமாகப் பார்க்க ஆரம்பிக்கிறார். அப்படிப் பார்ப்பதன் மூலம் பிறழ்வின் ஆழ்மனதில் ஊடுருவுகிறார். தான் எவ்வளவுதான் ஆட்டம் போட்டாலும் பயமுறுத்தினாலும் தன்னை ஒருவர் ஆடாமல் அசையாமல் உற்றுப் பார்த்துக்கொண்டிருக்கும்போது எப்பேர்ப்பட்ட ராட்சசமும் நெளிய ஆரம்பித்துவிடுமல்லவா. தஞ்சை ப்ரகாஷின் பார்வையில் அது நிகழ்கிறது. கத்தி மேல் நடக்கும் விஷயம்தான். சில இடங்களில் தடுமாறவும் செய்கிறார் ப்ரகாஷ். ஆனால், தன் தடுமாற்றத்தை மறைக்க அவர் முயலவில்லை.
Reviews
There are no reviews yet.