சமூகம், மதம், அரசியல், நன்னெறிகள் மூலம் ஒடுக்கப்படும் பெண்மனம் தளைகளைக் களைந்து எறியும் ஓசையின் எதிரொலிகள் ஸர்மிளா ஸெய்யித்தின் கவிதைகள். மதத்தில் கருணைக்குப் பதிலாக வெளிப்படும் சடங்குத் தன்மையையும் அரசியலில் பொது மேன்மைக்கு முரணாகப் பேணப்படும் தன்னலத்தையும் சமூகத்தில் பெண்ணுக்கு அளிக்கப்பட வேண்டிய சமநோக்குக்கு எதிராகப் பூட்டப்படும் விலங்கையும் இந்தக் கவிதைகள் அடையாளம் காட்டுகின்றன. அதே சமயம் அவற்றுக்கு எதிராகக் கலகம் செய்கின்றன. பெண்ணின் உடலும் மனமும் இயைந்து செய்யும் விடுதலை அறிக்கையைக் கவிதைகளாக உருமாற்றியிருக்கிறார் ஸர்மிளா ஸெய்யித். கிழக்கிலங்கையிலிருந்து ஒலிக்கும் இன்னொரு புத்திலக்கியப் படைப்பு இந்நூல்.