இன்று உலகளவில் பொதுத்தளத்தில் விவாதத்திற்குரிய முக்கியமான விஷயமாகக் கருத்துரிமை முன்னிற்கிறது. நூல்களைத் தடை செய்வது, எரிப்பது, நூலாசிரியர்கள் மீது வன்முறையைப் பிரயோகிப்பது, கொலை செய்வது பரவலாக நடக்கிறது. அது மட்டுமல்ல, ஊடக வெளியில் தெரிவிக்கப்படும் எந்தக் கருத்தின் மீதும் உடனடியாக வன்மத்தையும் வக்கிரத்தையும் பிரயோகித்து வன்முறைக்கு இட்டுச் செல்லும் நடைமுறைகள் மிகுந்துள்ளன. இச்சூழலில் கருத்துரிமை குறித்து சட்ட ரீதியாகவும் அறம், தார்மீகம் ஆகியவற்றின் அடிப்படையிலும் ஜனநாயகக் கூறுகளை மையமிட்டும் விரிவாக விவாதிக்க வேண்டிய தேவை உள்ளது. அத்தேவையை உணர்த்தும் நூல் இது. கிட்டத்தட்ட இருபது ஆண்டுகாலமாகக் கருத்துரிமைக்கு ஊறு நேர்ந்த சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட எதிர்வினைகள் இந்நூல் கட்டுரைகள். பத்திரிகையாளராகவும் பதிப்பாளராகவும் கண்ணனின் முக்கியமான கவனம் கருத்துரிமை தொடர்பானது. கருத்துரிமைக்கு ஆதரவாக எழுதப்பட்ட இக்கட்டுரைகள் அதற்கு எதிரான கருத்துக்களைக் கவனத்துடன் பரிசீலித்து விவாதிக்கின்றன. – பெருமாள் முருகன்