கவிராயர் பெற்றதும் இழந்ததுமான, வருந்தியதும் மகிழ்ந்ததுமான தம் நிகழ்வுகளைக் கொண்டாடுகிறார். அவை காலத்தின் தூசுபடிந்த புகைப்படங்களாக இருக்கலாம்; ரயில் பயணங்களாக இருக்கலாம்; எல்லாவற்றிலும் அவர் வாசகனுக்கு உணர்த்துவதற்கான தருணங்கள் இருக்கின்றன . . . ஒரு நல்ல படைப்பாளி தேர்ந்த வாசகனாகவும் இருப்பான். அவருடைய வாசக அனுபவத்தின் வேர்களையும் மலர்ச்சியையும் இந்நூலின் பல பக்கங்களில் காணமுடிகிறது. ‘தெருவென்று எதனைச் சொல்வீர்?’ தொகுப்பு நான் ‘நனவிடை தோய்தல்’ என்ற எஸ்.பொ.வின் படைப்புக்குப் பிறகு அனுபவித்துப் படித்த இலக்கியமாக அமைந்தது. மனிதர்களுக்குச் சம்பவங்கள் நேரலாம். அவற்றை நினைவுகூரவும் செய்யலாம். ஆனால் இலக்கியமாகப் படைப்பது எப்படி என்பதுதான் அறைகூவல். இதில் தஞ்சாவூர்க் கவிராயர் வெற்றிபெற்றிருக்கிறார். -இன்குலாப்