பார்ப்பனியத்தை (அவாளுக்கு பிராமணியம்) ஒழித்துவிட்டால் சாதி ஒழிந்து விடுமா?
பார்ப்பனருக்கு இருக்கும் உள்ளார்ந்த பண்புகள் அதற்கு எதிராக முன் வைக்கப்படும் பார்ப்பனரல்லாதோர் எனும் தொகுப்புக்கு, சாதி கூட்டத்திற்கு உண்டா? அதன் பொதுப்பண்பு என்ன?
உன்னதப் பார்ப்பனனின் (பிராமணனின்) தத்துவார்த்த ”சுயமீட்பு தீண்டாமையை” அறியாமையில் போலி செய்து ‘அசல் தீண்டாமை’ ஆக்கி சாதியுமாக்கியவர்கள், அவர்களுக்கெதிராய் உருத்திரண்டிருக்கும்/ திரட்டப்பட்டோரான, பட்டியல் சாதிகள் தவிர்த்த, பார்ப்பனரல்லாத சாதிகளாய் இருக்க, பார்ப்பனரை பழி சொல்வதெப்படி?
சமஸ்கிருத வேதமரபு அருளித்தந்த பூர்வ இந்து சிந்தனைகளின்றி இங்கு பௌத்தமும், ஜைனமும் இன்னபிற வேதாந்த,சித்தாந்த மரபுகளுக்கு ஆதாரம் ஏது ?
இன்றும் பார்ப்பனியம் தன் மீட்டுருவாக்கத்தை எத்தனை முறைகளில் கட்டி எழுப்ப முனைகிற, எத்தனைவிதமான அறிவார்ந்த வாதங்கள். அடேயப்பா.
வர்ண மற்றும் சாதிய படிநிலையின் உச்சமாக அமர்ந்து கொண்டு, இன்னும் தன்னைத் தத்துவார்த்த முலாம்கள் பூசி காத்துக் கொள்ள முனையும் பார்ப்பனியத்தைச் சாய்க்காமால் சாதி ஒழிப்பு எப்படிச் சாத்தியம்?. பார்ப்பனியத்தை அப்படியே விட்டு விட்டு, பார்ப்பனியத்தின் கொடையான சாதியை, அதன் குரூரமான தீண்டாமையை ஆரத்தழுவி அதன் வழிநின்று ,அதன் இன்றைய செயல்வடிவாய் , ‘பார்ப்பனியமாய் ‘ இருப்பவனை எப்படி நேர்செய்வது, வழிப்படுத்துவது. அடிப்படைகளை அப்படியே வைத்துக் கொண்டு கட்டுமானங்களைச் சாய்ப்பதால் காரியம் ஆவதில்லை. அதன் அடிப்படைகளைச் சிதைக்காமல் ஆவதொன்றுமில்லை. அதைத்தான் பெரியார் செய்தார். சூத்திரன் எனும் இழிவை ஏற்காதே. உன்னை இழிவு செய்யும் பார்ப்பனிய படிநிலையில் உன் இடத்தைக் கோரி ( ஷத்திரியன் என்றும் வைசியன் என்றும்) மண்டியிடாதே என்பதுதானே அவர் சொன்னது.
இந்தவித தத்துவ விளக்கங்களில் சுழன்று வரும் பார்ப்பனிய இந்துமதவாதத்தை பெரியார் எதிர்கொண்ட முறை அருமையானது. ஆனால் எளிமையானது. அவர் தத்துவ விசாரங்களை விசாரணை செய்யாதவரில்லை. அவரது விசாரணையின் முடிவு, பார்ப்பனிய இந்துமதமே சாதி எனும் இழிவிற்கான காரணம் என்ற கண்டடைவு. இங்கு சாதிதான் அனைத்து இழிவுகளுக்குமான காரணம் .சாதி எனும் இழிவிலிருந்து மனிதர் மீள்வதற்கான எளியவழி பிறப்பால் உனக்கு மேலான ஒருவனோ அல்லது உனக்கு கீழான ஒருவனோ இல்லையென உணர்வது, ஏற்பது , நடைமுறைப்படுத்துவது. மிக எளிமையாகத் தோன்றும் இந்தத் தீர்வு உணர்வாக மாறுவதும், செயல்படுவதும் எளிதல்லதான். ஏனெனில் எளிதாகத் தோன்றும் தீர்வு மிக நுட்பமான, ஆழமான விளைவுகளைக் கொண்டது. மேல் கீழ் எனும் படிநிலை தகர்ந்த சாதி இருப்பு , அதன் உள்ளார்ந்த பண்பை இழந்து விடுகிறது. சாதியத்தின் உள்ளார்ந்த பண்பை அழிப்பதுதான் சாதியை அழிப்பதற்கான வழி. சாதி இழந்தநிலைதான் சுயமரியாதை பெறும் நிலை.
பெரியாரின் பார்ப்பனிய எதிர்ப்பு , மத எதிர்ப்பு எல்லாம் சாதியை ஒழிப்பது என்பதன் நோக்கிலேயே . அவர் கடைசியாக நிகழ்த்தியதும் சாதி ஒழிப்பு மாநாட்டு உரையே. இடைவிடாத தொடர் போராட்டங்களை நடத்துவதே சாதி ஒழிப்பிற்கான வழி என்றார் அவர்.
மேற்கண்டவாறு பெரியாரின் சாதி ஒழிப்புவாதத்தை உருத்திரண்ட வடிவத்தில் காட்டுபவை சாதி மகாநாடுகளிலும் சாதி ஒழிப்பு மகாநடுகளிலும் பெரியார் ஆற்றிய உரைகள். அவ்வுரைகளின் தொகுப்பே இந்நூல். இது பெரியாரின் சாதி ஒழிப்பு வாதத்தைப் புரிந்துகொள்ள விழைவோர் அனைவருக்குமான ஒரு கையேடு.