இந்திய மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தினசரி பேசும் போது ஆயுர்வேதச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உட்பகுதியில் ஒரு மூலையில் வாழும் படிக்காதவர் கூட தயிர் சாப்பிட்டால் நெஞ்சில் கபம் கட்டும் என்கிறார். பலர் தினமும் வேர்களையும் பச்சிலைகளையும் பயன் படுத்துகிறார்கள். வெட்டிவேர் உடலின் ‘சூட்டை’த் தணிக்கும்; கோடைகாலத்தில் சற்று இதம் அளிக்கும் என்கிறார்கள். இந்தியர்களைப் பொறுத்தமட்டில் ஆயுர்வேதம் இரத்தத்தில் ஊறிக்கிடக்கிறது. பல நூற்றாண்டுகளாக வாழ்வில் இணைந்து விட்டது.