வெகுஇயல்பான எழுத்தின் மூலம் தன்னைச் சுற்றிலும் நடப்பவற்றை கதைக்களமாக்கியிருக்கிறார் நாச்சியாள் சுகந்தி. இன்றைய வைஃபை சூழ் நாட்களின் ஒளிச் சிதறல்கள் இச்சிறுகதைகளின் எல்லாப் பக்கங்களி லும் ஆங்காங்கே தேங்கியிருக்கின்றன. வால்பாறையில் கழிந்த இவரு டைய இளம்பருவத்து வாழ்வின் ஞாபகங்கள் சில கதைகளில் புன்னகைக்கின்றன. இத்தொகுப்பில் 11 கதைகளில் ஒன்று புரியாது பூசணிக்கா என்றொரு கதை. இளம்பருவத்தில் ஏற்படும் எதிர்பாலினக் கிளர்ச்சிக்கு ஆட்படாமல், இரு உள்ளங்களின் உரையாடலுக்கு இடையே பூத்திருக் கும் நட்பைப் பேசும் கதை. கதையில் வரும் சண்முகம், புத்தகங்களால் ஜன்னல் செய்பவன். புத்தகம்தான் அவனுக்கு வேட்டை, புதையலும் அதுதான் அவனுக்கு. இப்படித்தான் சிலரது மாடத்தில் சண்முகம் போன்ற சிலர் அகல்விளக்கு ஏற்றி வைத்துவிடுகிறார்கள். அதுவும் அணையா விளக்கு. இன்னொரு கதை,அறுத்துக் கட்டினவ உக்கிரம் மிதக்கும் கதை. குழந்தையுடன் தனித்து வாழும் செல்லம்மா என்கிற ஒரு வயல் மனுஷியைக் கண்முன்னே நிறுத்தும் கதை. ஆதித் திமிர் அவள் கண்களில் ஜொலித்தது என்று கதை நிறைவுறும்போது, நம் கிராமங்களின் ஏதோ ஒரு முகம் சட்டென்று மின்னி மறைவதை உணர முடிகிறது.