மலேசிய எழுத்தாளரான மா.சண்முகசிவாவின் இருபது ஆண்டு கால ஆக்கங்களிலிருந்து தேர்ந்தெடுத்து இப்படைப்பைத் தொகுத்திருக்கிறார் ம.நவீன். ஒவ்வொரு கதையும் அதன் கதாபாத்திரத்தின் குண வார்ப்பில் மலேசிய மண்ணின் நிழலைச் சுமந்தவண்ணம் அறிமுகம்கொள்கிறது. வெவ்வேறு காலகட்ட சமூகத்தையும், மலேசியத் தமிழ் மக்கள் மையப்படுத்திய அரசியலையும், அதன் வழியே அவர்களின் சிக்குண்ட வாழ்க்கையையும் நுண்மையாக விவரிக்கிறார். நெருக்கடிகளையெல்லாம் கடந்து, மனிதர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் மானுடம் வெளிப்படும் இடங்கள் வாசிப்பிலும், வாழ்க்கை குறித்த புரிதலிலும் ஓர் ஆசுவாசத்தை அளிக்கிறது. உடல் மீது செலுத்தப்படும் ஆதிக்கம், மாந்திரீகச் செயல்களை முன்வைத்து நிகழ்த்தப்படும் அதிகார வேட்கை, நம்பிக்கைகளின் மீது கட்டமைக்கப்படும் அரசியல் என்று பல நுட்பமான கதைகளைத் தனித்துவமான பார்வையில முன்வைத்திருக்கிறார்.