இடத்துடன் மனம் இணையாதிருக்க, இந்தியத் துறவிகள் பொதுவாக எந்த ஒரு இடத்திலும் அதிக காலம் இருத்தலைத் தவிர்ப்பது வழக்கம். இதற்கு எதிர்மறையாக, தொடர்ந்து நகர்ந்து கொண்டிருக்கும் ஒரு சமூகம், எங்கோத் தம்மைத் தொலைத்தது போல் உணரத் தொடங்கி, வெறுமையில் நிலையான ஒரு இடத்தை, தமக்கென அடையாளங்களைத் தேடுகிறது. துறவிக்கும் சாமானியனுக்கும் இடையில் நிகழும் இந்த முரணியக்கத்தை அடையாளம் குறித்த விவாதத்தின் தொடக்கமாகப் பார்க்கிறேன்.
இந்தப் புள்ளியிலிருந்து நம் யாத்திரையைத் தொடங்கினால், அடையாளங்களைக் களைவதும் அணைப்பதும் மனதின் மெல்லிய அசைவால் நிகழ்வதை உணரலாம். எழுத்தாளன் அடிப்படையில் அபத்த தரிசனவாதி என்பதால், இவ்வகை பாவனைகளுக்கு அப்பால் திகழும் ‘அகம்’ நோக்கி நகரவே விரும்புவான்!