ஆந்த்ரேய் தார்க்கோவஸ்கியின் ஏழு படங்களும் ஏழு புனித நூல்கள் எனச் சொல்வது மிகையான கூற்றாகாது. வேறு யாருடனும் ஒப்பிட முடியாதவர் தார்க்கோவஸ்கி. அவரிடம் வெளிப்படும் ஆழ்ந்த ஞானம், மேதமை, இலக்கியம், இசை, ஓவியம் போன்ற மற்ற கலைகள் மீதான ஈடுபாடுகள் அவரை மேலான இடத்தில் அமர வைக்கின்றன. சில வேளைகளில் அவர் கடவுளின் தூதுவன் போலவே தோற்றம் தருகிறார். அவருடைய படங்களைப் பார்க்கக் கிடைத்ததே பெரும்பேறு எனவும் அவற்றைப் பார்ப்பது என்பது நம்மைப் பரிசுத்தமாக்கிக்கொள்ளும் காரியமே எனவும் தோன்றும்.