கவிதைக்காரன் இளங்கோவை ஒரு எழுத்தாளனாக பேச்சாளனாக நண்பனாக நான் எழுத வந்த காலத்திலிருந்து தெரியும். அவருடைய பிரெய்லியில் உறையும் நகரம் என்ற கவிதைத் தொகுப்பில் அவர் மேற்கொண்ட பரிசோதனைகளைத் தமிழ் இலக்கிய உலகில் யாரும் மேற்கொண்டிருப்பார்களா என்று தெரியவில்லை. அதன் பிறகு நான் படித்த அவருடைய முழுமையான படைப்பு ஏழு பூட்டுக்கள் என்ற புதினம். கதை துண்டு துண்டாக நகர்கிறது. ஏதோ ஒரு கயிறு திடீரென்று அவற்றில் சில துண்டுகளைக் கட்டுகிறது. பின்னர் புதிதாக மேலும் சில துண்டுக் கதைகள். இப்போது நாம் கயிற்றைத் தேடத் தொடங்கி விடுகிறோம். கதையில் எல்லாமே வருகிறது. தன்னுடைய கதையைத் தானே எழுதுபவர்களின் கதையும் கதைக்குள் தொலைந்து போனவர்களின் கதையும் வருகிறது. இந்த நூல் எந்த விதமான புதினத்தின் கட்டுக்குள்ளும் அகப்படாமல் இருக்கிறது. எங்கும் ஆரம்பிக்கவும் இல்லை. முடியவும் இல்லை. முடிவிலிக் கிழவனின் புன்னகையைப் போல.