கனகராஜ் சிறந்த சிறுகதைகளுக்காக நிறைய விருதுகளைப் பெற்றிருக்கிறார் கனகராஜ். நூறு ஆண்டுகளுக்கு முன்பாக வேலையின் தமிழகத்திலிருந்து காரணமாகக் கர்நாடகாவிற்குப் புலம்பெயர்ந்து போய் அங்கேயே வேர்விட்டு வாழும் குடும்பத்தின் அகபுற உலகினை மிகச்செறிவாக எழுதியிருக்கிறார் கனகராஜ். இது ஒரு புதிய கதையுலகம். இதுவரை நாம் பதிவு செய்யத் தவறிய வாழ்க்கையை அதன் அடர்த்தியோடு உண்மையாகப் பதிவு செய்திருக்கிறார்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இரண்டுவிதமான அந்நிய வாழ்க்கையைப் பேசுகிறது. ஒன்று பிழைப்பிற்காக அரபு நாடுகளுக்குச் சென்று வாழும் இளைஞர்களின் சூழல் மற்றும் நெருக்கடிகள். ஊர் நினைவுகள். அரபு உலகில் சந்திக்கும் அடையாளச் சிக்கல்கள். அச்சமூட்டும் மனநிலை. பன்னாட்டு சமூக வாழ்க்கையை எதிர்கொள்ளும் விதம் எனப் புதிய கதைவெளியினை மையமாகக் கொண்டவை
இரண்டாவது வகைத் தமிழ்நாட்டிலிருந்து கூலித்தொழிலாளர்களாகச் சென்றவர்கள் கர்நாடகத்திலே தங்கி வாழும் போது அவர்கள் வாழ்க்கை எப்படியிருந்தது. அங்கு நிலவிய சாதிய ஒடுக்குமுறை மற்றும் மேலாதிக்கம். சடங்குகள் நம்பிக்கைகள். திருமண உறவுகள். மற்றும் மாறும் தலைமுறைகளின் அடையாளச்சிக்கல்கள். புகலிடத்தில் பெண்களுக்கு ஏற்பட்ட நெருக்கடிகள். பொருளாதாரப்பிரச்சனைகளை முன்வைத்து எழுதப்பட்ட கதைகள்.
மலையாளச் சிறுகதைகளில் இது போன்ற அரபு தேச வாழ்க்கை விரிவாகப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. கன்னடத்திற்கு நிச்சயம் இது புதுவகைத் திறப்பாகவே அமைந்திருக்கும். கனகராஜ் கதையை வளர்த்தெடுக்கும் முறை அழகாக உள்ளது. நினைவுகளையும் நிகழ்வினையும் அவர் அழகாகப் பின்னிச் செல்கிறார். அதிக உரையாடல்கள் கிடையாது. காட்சிகளாக விரியும் இந்த எழுத்தின் வழியே கடந்தகாலமும் நிகழ்காலமும் அழகான இணைந்து விரிகின்றன.
வாட்டர்மெலன் போலப் புதிய இளம்படைப்பாளிகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் யாவரும் பதிப்பகத்திற்கும் சிறந்த மொழியாக்கத்தைத் தந்த கே.நல்லதம்பிக்கும் அன்பும் பாராட்டுகளும்
வாட்டர்மெலன் தமிழ்வாழ்க்கையின் இன்னொரு பரிமாணத்தைத் தருகிறது. கனகராஜ் பாலசுப்ரமண்யம் இன்னும் பல உயரங்களைத் தனது எழுத்தில் அடைவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
– எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்