நவீன தமிழ் இலக்கியத்தில் திருநங்கையரின் வாழ்வின் ஒரு பரிமாணத்தை மிக நேரடியாகவும், வெளிப்படையாகவும் பேசிய படைப்பு சு.வேணுகோபாலின் பால்கனிகள். தன்னைப் பெண்ணென பிறருக்கு நிரூபிக்க அத்தனை துயரையும் தாங்கும் அக்கதையின் நாயகி இறுதியில் ஒரு குழந்தையைத் தத்தெடுத்து தாயாகி நிறைவுறும் கணம் நவீனத் தமிழிலக்கியத்தின் உச்சக்காட்சிகளில் ஒன்று. அதன் முழு பரிமாணங்களையும் சிகண்டியில் உணர முடிவதுதான் தமிழ் இலக்கியத்தின் அடுத்த கட்ட பாய்ச்சல் என்பேன். ஓர் இலக்கிய வாசகன் இலக்கியத்திலிருந்து பெற்றுக்கொள்ளும் கொடைகளில் முக்கியமானது அவனறியா வாழ்க்கையை வாழ்ந்து பார்க்கும் அனுபவத்தையே. சிகண்டி இதுவரை தமிழ் இலக்கிய வாசகர்கள் அறியாத, அல்லது மிகக்குறைவாகவே அறிந்த மலேசியத் திருநங்கையரின் வாழ்க்கையை அணுகி நின்று உடன் வாழும் அனுபவத்தை அளிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.
– ராஜகோபாலன் ஜா