ஒரு வாசக மனம் உணர்ந்து கொள்ளும் வகையில் படைப்புக்கள் மூலம் எனக்கான ஒரு உலகத்தை உருவாக்கி வருகிறேன். மலர்ந்து மலர்ந்து உதிர்ந்தவையும், உதிர்ந்து உதிர்ந்து மலர்ந்தவையுமான கனவுகளும், கற்பனைகளும் எனது கதைகள் மற்றும் கவிதைகளிலே இருக்கின்றன. மழையாய் நானே பொழிந்து , மழையில் நானே கரைபவளாகிறேன். மின்னல் தெறிப்பு, இடி,முழக்கத்துடன் புறப்படும் ஆர்ப்பாட்டமின்மை எனது இயல்பு. என் படைப்புக்களிலும் அவை பிரதிபலிக்கின்றன. வீடு, அலுவலகம், பயணம், சில சமயங்களில் ஓட்டம் என்ற அவசர வாழ்க்கையின் நடுவே ஒரு குளிர்க் காற்றாக முகத்தில் வந்து மோதியவை எந்தக் கதைகள். மனதில் அந்தக் கணத்தில் எழுதிய பல வரிகள் தாளில் நழுவிப் போயிருக்கின்றன. எனினும் சளைக்காமல் நான் பின் தொடர்ந்து ஓடிய தும்பிகளையும், வண்ணத்துப் பூச்சிகளையும் சில தருணங்களுக்குள் பிடித்து வந்திருக்கிறேன்.
விரல் நகத்தின் மென்சூடும், எரிமலையின் குழம்பும், அக்னியின் இருவகைத் தோற்றப்பாடுகள் என்பதை நான் எப்போதும் ஞாபகம் கொள்கிறேன். இப்படித்தான் எழுதவேண்டும் என்று நான் ஒரு போதும் திட்டமிட்டு வரையறை செய்து கொண்டு எழுதுபவள் அல்ல. அதே போல் எந்த சித்தாந்தத்துக்கும், கொள்கைப் பிரகடனத்துக்கும், பிரசாரத்துக்கும் உரிய ஓர் இலக்கிய வடிவமாக நான் கவிதையைக் கருதுவதில்லை. அவரவர் பரவசத்திலும் அல்லது வலியிலும் இருந்தே அவரவர் எழுத்துக்கள் பிறக்கின்றன.
உண்மைகளை உரக்க பேசும், சத்தியத்தைக் கோரும் ஓர் உலகத்திலிருந்து என் கதைகள் பிறக்கின்றன.