தமிழர் வரலாறும் பண்பாடும் இலக்கியத்தோடு சங்ககாலந்தொட்டு இணைந்து வளர்ந்து வந்துள்ளன. இலக்கியங்களில் பல வகைகள், பல உத்திகள், பல கருத்தாடல்கள் இருக்கக் காண்கிறோம். இவ்வகை இலக்கிய உத்திகள் அனைத்தும் தமிழர்களின் பண்பாடாக வெளிவந்துள்ளதுடன் அது தொடர்ந்து வளர்ந்தும் வருகிறது. புதுப்புதுக் கோட்பாடுகளை ஏற்படுத்தித் தமிழர் வாழ்வை மேன்மேலும் வளம்பெற வைத்தவை தமிழ் இலக்கியங்கள். அவை வளர்ந்த முகத்தான் மொழியும் வளர்ந்திருக்கிறது. தமிழை வெவ்வேறு விதத்தில் கையாளும்போது அது காலப் போக்கில் பல மாற்றங்களை நேர்கொள்கிறது. இவ்வகையில் சங்ககாலத் தமிழையும் இக்காலத் தமிழையும் இலக்கியப் பண்போடு இணைத்து நோக்கும் இந்நூல், இவ்வகை இலக்கியச் சுவடுகளை இலக்கியத் திறனாய்வோடு ஆய்ந்தறிந்து தமிழ்மொழி, தமிழ் இலக்கியங்கள், தமிழர் பண்பாடு ஆகியவற்றை இணைக்க முற்படுகிறது.