‘நள வருடத்துப் புயல்’ எனக் குறிப்பிடப்படும் பெரும்புயல் நூறு ஆண்டுகளுக்கு முன் (22–11–1916) புதுச்சேரியைச் சூறையாடியது. புதுவையில் அப்போது வசித்த பாரதி கவிஞராக, செய்தியாளராக, நிவாரணப் பணிகளை முன்னெடுத்த களப்பணியாளராகப் புயலையும், புயலின் விளைவுகளையும் எதிர்கொண்டார். இதனைப் பாரதியின் கவிதைகளும், கட்டுரைகளும், வ.வெ.சு. அய்யர் அறிக்கையும், பாரதி, மண்டயம் சீனிவாசாச்சாரியார் மகள்கள், பாரதிதாசன் ஆகியோரின் பதிவுகளும் வெளிப்படுத்துகின்றன. ‘பாரதி கவிஞர் மட்டுமல்லர்; தேசபக்தர் மட்டுமல்லர்; தன்னலங் கருதாத மக்கள் தொண்டர்’ என்று அன்றைய புதுச்சேரி மக்கள் பேசிக்கொண்டதாகப் பாரதிதாசன் நினைவுகூர்ந்திருக்கின்றார். பாரதியின் இந்த வாழ்க்கைப் பகுதியை அவருடைய எழுத்துகளாலும் உடனிருந்தோரின் நினைவுப் பதிவுகளாலும் திரட்டித் தருகின்றது இந்நூல். சிதறல்களாக இருந்த பாரதி வாழ்வின் ஒரு பக்கத்தை இந்நூல் முழுமைசெய்கிறது.