யாழ்ப்பாணக் கச்சேரியடியில் ‘இவ்விடத்தில் துப்பாதீர்கள்’ என்று அறிவிப்பு எழுதிவைத்தால் ‘எந்த மானமுள்ள யாழ்ப்பாணத்தானும் துப்பத்தான் செய்வான்’ என்று எழுதும் எள்ளலும் தள்ளலும் கொண்ட இவருடைய தமிழ் எழுத்துக்காகவே கலைத்துப் பிடித்து நட்பானேன். ஆழமும் விரிவும் மாத்திரமல்ல புன்னகையுடனும் படிக்கக்கூடிய எழுத்துநடை கைவரப் பெற்றவர். சச்சிதானந்தன் சுகிர்தராஜா வள்ளுவன் குறிப்பிட்ட நுண் மான் – நுழை புலம். தான் சார்ந்த துறையில் பெரிய ஆளுமை. இவர் துறைசார்ந்த அறிஞர்கள் அறிந்த பெருந்தகை. வாழையடி வாழையாக வரும் இலங்கைப் புலமை மரபில் வரும் இவர் மற்ற புலமையாளர்களைப் போல் தான் சொல்லவாற விடயத்தை முறைத்தபடியோ விறைத்தபடியோ சொல்லாமல் சிரித்துக்கொண்டு உறைக்கச் சொல்லும் எள்ளல் ததும்பும் புதுநடைக்குச் சொந்தக்காரர்.