இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் இரு பேராளுமைகள் வ.உ.சி.யும் பாரதியும். இருவருமே இந்திய விடுதலைப் போராட்டத்தின் முதல் வெகுசனப் போராட்டக் கட்டமான சுதேசி இயக்கத்தின் குழந்தைகள்; ஒரே காலகட்டத்தில் ஒரே அரசியல் பின்னணியில் ஒன்றாகவே வெளிச்சத்திற்கு வந்தவர்கள். 1906இல் தொடங்கி மறையும்வரை இருவருக்குமிடையே உணர்ச்சிப்பாங்கானதொரு நட்பு வளர்ந்து செழித்தது. அந்தக் காவிய நட்பை ஆவணப்படுத்துகிறது இந்நூல். பாரதியைப் பற்றி வ.உ.சி. எழுதிய நினைவுக் குறிப்புகளையும், வ.உ.சி.யைப் பற்றிப் பாரதி பல்வேறு சமயங்களில் எழுதிய கட்டுரைகள், கவிதைகள், நூல் மதிப்புரைகள், கருத்துப்படங்கள், விளம்பரங்கள் முதலானவற்றையும் இந்நூல் கொண்டுள்ளது. தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் பற்றி வ.உ.சி.க்கும் பாரதிக்கும் இடையே நடைபெற்ற சூடானதொரு விவாதமும் முழுமையாக நூலாக்கம் பெறுகின்றது. இருவரின் நட்பையும், அக்கால வரலாற்றையும் ஒருங்கே விளக்கிக்காட்டும் வேறு பல ஆவணங்களும் இடம்பெற்றுள்ளன. இவற்றை நேர்த்தியாகத் தேடித் தொகுத்துள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி இவற்றின் பின்னணியை விளக்கும் பதிப்புரையை எழுதியுள்ளார்.