தமிழக ஒடுக்கப்பட்டோர் அரசியல் முன்னோடிகளில் முதன்மையானவரான இரட்டைமலை சீனிவாசன் (1860-1945) எழுதிய தன் வரலாற்று நூல் இது. தன்னுடைய அரசியல் பயணத்தின் முக்கியமான தருணங்களை தேர்ந்தெடுத்து சுருக்கமாக இந்நூலில் முன்வைத்திருக்கிறார். 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் நவீன அரசியல் தளம் சார்ந்து தலித்துகளிடையே உருவான அரசியல் எழுச்சி 20ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர் ஆட்சியினூடாக தலித்துகள் மேற்கொண்ட சட்டரீதியான தலையீடுகள் ஆகியவற்றை விவரித்துச் செல்லும் இந்நூல் தனிமனிதரின் அரசியல் பயணமாக மட்டும் நில்லாமல் இந்திய / தமிழக வரலாற்றின் இன்றியமையாத காலகட்டத்தை பிரதிபலிக்கும் வரலாற்று ஆவணமாக மாறி நிற்கிறது. இந்நூலிலிருந்து கிடைக்கும் தரவுகள் மூலம் தாழ்த்தப்பட்டோர் வரலாற்றை மட்டுமல்ல தமிழக அரசியல் வரலாற்றையும் புதிய பரிமாணத்தோடு வாசிக்க இயலும். ஒடுக்கப்பட்டோர் அரசியல் செயல்பாடுகள் பற்றிய புதிய தரவுகளும் அதனூடாக மாற்று பார்வைகளும் துலங்கிவரும் இன்றைய பின்னணியில் விரிவான அடிக்குறிப்புகள் பின்னிணைப்புகள் ஆகியவற்றை இணைத்து இந்நூலை பதிப்பித்திருக்கிறார் ஸ்டாலின் ராஜாங்கம்.