தமிழ் இலக்கியம் தன்வரலாற்று எழுத்துகளுக்குப் பெயர்போனதல்ல. சுயசரிதை எழுத்திலும் பாரதி ஒரு முன்னோடி என்பதைப் பலர் அறியமாட்டார்கள். புனைவு வடிவில் பாரதி எழுதிய (முற்றுப்பெறாத) ‘சின்னச் சங்கரன் கதை’யினையும், ‘கனவு’ என்ற கவிதை வடிவில் அமைந்த சுயசரிதையினையும் கவனப்படுத்துகிறது இந்நூல். கழிவிரக்கம் மிகுந்த பிரதியாகக் ‘கனவு’ இருக்க, தமிழ் இலக்கிய வரலாற்றில் நகைச்சுவை மைல்கல்லாக விளங்குகிறது ‘சின்னச் சங்கரன் கதை’. பாரதியியலுக்கு முக்கியப் பங்காற்றியுள்ள ஆ. இரா. வேங்கடாசலபதி காலச்சுவடு கிளாசிக் வரிசைக்கு இவ்விரு பிரதிகளையும் தொகுத்தளித்து விரிவான முன்னுரையை எழுதியிருக்கிறார். ப.ர்: ஆ.இரா. வேங்கடாசலபதி: ஆ. இரா. வேங்கடாசலபதி தமிழ்ச் சமூக வரலாறு தொடர்பாகக் குறிப்பிடத்தகுந்த ஆய்வுகள் செய்துவருபவர். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் (Madras Institute of Development Studies) பேராசிரியராக இருக்கும் இவர், மனோன்மணியம் சுந்தரனார் (திருநெல்வேலி), சென்னை, சிகாகோ, சிங்கப்பூர் பல்கலைக்கழகங்களில் பணியாற்றியிருக்கிறார். வி.கே.ஆர்.வி. ராவ் விருதும் (2007) விளக்கு புதுமைப்பித்தன் விருதும் (2018) பெற்றிருக்கிறார்.