இந்தியாவில் ‘தீண்டத் தகாதவராக’ இருப்பது என்றால் என்ன? இந்தியர்களில் சிலர் பிறரைத் தொடுவதை ஏன் இழிவாக நினைக்கிறார்கள்? இந்தியாவின் மகத்தான புரட்சியாளர்களில் ஒருவரான பீமாராவ் ராம்ஜி அம்பேத்கர் (1891 – 1956), ‘தீண்டத் தகாதவராக’ வளர்வது மற்றும் தொடர்ந்து பாரபட்சத்திற்கு ஆளாவது ஆகிய அனுபவங்களைப் பதிவு செய்திருக்கிறார். பத்து வயதில் பள்ளியில் பட்ட அனுபவம், கொலம்பியா பல்கலைக்கழகத்திலிருந்து வந்த பிறகு பரோடாவில் கிடைத்த அனுபவம், பயணத்தின்போது பெற்ற அனுபவம் என்று இவை பல விதமானவை. பல்வேறு தடைகளைத் தாண்டிய அம்பேத்கர், இந்தியாவின் அரசியல் சாசனத்தை வடிவமைத்தார். கடைசியில் புத்த மதத்தைத் தழுவினார். அவர் பெற்றது போன்ற அனுபவங்கள் இந்தியாவின் 17 கோடி தலித்துகளை இன்னமும் துரத்துகின்றன. அவர்களுக்கு இன்னமும் நீரும் தங்குமிடம் வாழ்வின் அடிப்படையான கௌரவங்களும் மறுக்கப்படுகின்றன.
பர்தான் – கோண்ட் கலை மரபைச் சேர்ந்த துர்காபாய் வ்யாமும் சுபாஷ் வியாமும், பெரும் சாதனை என்று சொல்லத்தக்க இந்த நூலில், மஹாட் சத்தியாக்கிரகம் போன்ற வரலாற்று நிகழ்வுகளைச் சமகால நிகழ்வுகளுடன் ஊடாடச் செய்கிறார்கள். மரபு சார்ந்த இலக்கணங்களை மீறும் அவர்கள், காவியத் தன்மை கொண்ட தங்கள் அற்புதமான கலையின் மூலம் சித்திரக்கலை மரபுக்குப் புத்துணர்வு அளிக்கிறார்கள்.