பத்தொன்பதாம் நூற்றாண்டிலும் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலும் நிலவிய சமூகக் கொடுமைகளால் ‘உள நோயாளர் விடுதி’ என்று அழைக்கப்பட்ட கேரளத்தில் மறுமலர்ச்சிக்கு வழியமைத்த முதன்மையான போராளிகளில் ஒருவர் அய்யன்காளி. தாம் பிறந்த புலையர் இனத்தைத் தீண்டாமையிலிருந்து விடுவிக்கப் போராடியதுடன் பேதமற்ற பொதுவான சமூகநீதிக்காகவும் அயராது சமர் புரிந்தவர். கல்வியினாலேயே பாரில் மேன்மைகள் எய்தலாகும் என்று உணர்ந்தவர்; உணர்த்தியவர். தீண்டத்தகாதவர்களுக்கு முதல் கல்விக்கூடத்தை உருவாக்கினார். பொதுவெளிகள் எல்லாருக்குமானவை என்று அறிவித்தவர்; அதைச் செயல்படுத்தியவர். ‘வில் வண்டி சமரம்’ மூலம் சாதிய ஒடுக்குமுறைக்கு அறைகூவல் விடுத்தார். அய்யன்காளியின் சமூக நீதிப் போராட்டங்கள் இன்று கேரள வரலாற்றின் எழுச்சி தரும் பக்கங்கள். வெறும் சமூகநீதிப் போராளி மட்டுமல்ல; எல்லா உயிரும் ஒன்றென்று கருதிய ஆன்மிகவாதி. மானுட விடுதலைக்காகப் பாடுபட்ட அறிவுலகப் பகலவன். இன்று அவர் நவீன கேரளத்தின் ‘மகாத்மா’. உணர்வூட்டுவதும் படிப்பினை அளிப்பதுமான அய்யன்காளியின் தன்னலம் துறந்த வாழ்க்கை வரலாற்றை விரிவான ஆய்வுக் குறிப்புகளுடனும் திருத்திச் சரிபார்க்கப்பட்ட தரவுகளுடனும் அரிய புகைப்படங்களுடனும் முன்வைக்கிறது இந்த நூல்.