இஸ்லாமிய சமூகம் இறுகிப்போன ஒரு சமூகம், அது வெளிக்குத் தெரியாத இருண்ட பகுதிகளைக் கொண்டது எனும் மாயையைத் தமிழில் முதலில் உடைத்தெறிந்த நாவல். கிராமத் தலைவனும் ஊர் முதல் குடியுமான வடக்கு வீட்டு அகமதுக்கண்ணு முதலாளியின் முன் அடங்க மறுக்கிறான். சுறாப் பீலி வியாபாரம் செய்யும் மஹ்மூது, தென் பத்தனைத் தேடி வந்த சித்து வேலைகள் தெரிந்த மாலத்தீவு தங்ஙளையும் அவன் உதாசீனம் செய்கிறான். இதை மீறலின் குறியீடாகக் கருதும் வாசக மனம் கூடவே மஹ்மூதின் மனைவியையும் மகளையும் நினைத்து விவரித்துச் செல்லும்போதே அதன் அடிநாதமாக, வெற்றுப் பிரதாபம் காரணமாக நசிந்துகொண்டிருக்கும் முதலாளியைப் பற்றிய பரிதாபமும் இழைந்து செல்கிறது. நாவல் கோடிகாட்டும் அம்சங்கள்கூட வேதியியல் மாற்றங்களுக்கு உள்ளாகி வாசக மனங்களை உலுக்குவது இந்நாவலின் குறிப்பிடத்தக்க மற்றொரு சிறப்பு. தோப்பில் முஹம்மது மீரான்: தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.