தி.ஜானகிராமன் நாவல்களில் மிகுந்த இலட்சியவாதத்தன்மை கொண்டது உயிர்த்தேன். பெண் நிலையை அழுத்தமாகச் சொல்லும் நாவலும் இதுவே. பெண் மனதின் இருநிலைகள் அனுசுயாவும் செங்கம்மாவும். அனுசுயா வெளிப்படையானவள். தனது இருப்பை கருத்துகளால் விளங்கிக்கொண்டவள். பெண்ணியல்பின் புறம் அவள். செங்கம்மா அந்தரங்கமானவள். வாழ்வை உணர்வின் தீவிரத்தால் அடையாளம் காண்பவள். பெண்ணியல்பின் அகம் அவள். இவ்விரு நிலைகளிலிருந்தும் மனிதர்களை நேசிப்பது தங்களது பிறவிப் பொருளாகக் கருதும் புள்ளியில் இருவரும் இணைகிறார்கள். அன்புக்கும் மானுடப் பரிவுக்கும் காதலுக்கும் அகம் என்றும் புறம் என்றும் பேதமில்லை என்பதை தமது செயல்களால் நிறுவுகிறார்கள். அந்த அன்பு ஆண்களை தோழமை கொள்ளச் செய்கிறது, மதிக்கச் செய்கிறது, உன்மத்தம் பிடிக்கச் செய்கிறது, கொல்லத் தூண்டுகிறது, தற்கொலைக்கும் உந்துகிறது. தி. ஜானகிராமன்: தி. ஜானகிராமன் (1921-1982) தி. ஜானகிராமன் தஞ்சை மாவட்டம் மன்னார்குடியை அடுத்த தேவங்குடியில் பிறந்தவர். பத்து வருடங்கள் பள்ளியாசிரியராகப் பணியாற்றியவர். பின்பு அகில இந்திய வானொலியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். கர்நாடக இசை அறிவும் வடமொழிப் புலமையும் பெற்றிருந்தவர். 1943இல் எழுதத் தொடங்கிய தி. ஜானகிராமன், ‘மோக முள்’, ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’ உள்ளிட்ட ஒன்பது நாவல்கள், நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள், மூன்று நாடகங்கள், பயண நூல்கள் ஆகியவற்றை எழுதினார். சிட்டியுடன் இணைந்து எழுதிய ‘நடந்தாய் வாழி காவேரி’ பயண இலக்கிய வகையில் முக்கியமான நூலாகக் கருதப்படுகிறது. ‘மோக முள்’, ‘நாலு வேலி நிலம்’ ஆகியன திரைப்படமாக்கப்பட்டுள்ளன. ‘மோக முள்’, ‘மரப்பசு’, ‘அம்மா வந்தாள்’ ஆகிய நாவல்களும் பல சிறுகதைகளும் இந்திய, ஐரோப்பிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. 1979இல் ‘சக்தி வைத்தியம்’ சிறுகதைத் தொகுப்பிற்கு சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது.