‘கிருஷ்ணப் பருந்து’ நாவலில் இரு பகுதிகள் இருக்கின்றன. இரண்டாவது பகுதிதான் முதற்பகுதிக்கு அர்த்தத்தையும் செறிவையும் நுணுக்கத்தையும் தருகிறது. இயற்கையாகப் பாத்திரங்களை உருவாக்குவதிலும், பிராந்திய பாஷையைப் பளிச்சென்று ஒரு சீறும் வேகமாக உருவாக்குவதிலும், இங்கும் அவர் வெற்றியைக் காணலாம்… இந்த நாவலில் சிந்தனையின் நிழல் சற்று அழுத்தமாகவே விழுந்திருக்கிறது. நாவலை நாம் படிக்கையில் அதன் மேல் தளம் ஒரு திசையில் நகர்வதைப் பார்க்கும் நாம், அதன் அடித்தளம் அதன் எதிர்த்திசையில் நகர்வதை உணரலாம். ஒரே சமயத்தில் இவ்வித இரண்டு இயக்கங்கள் சலிப்பதைச் செய்து காட்டுவது ஒரு ஆற்றல் என்றே நான் கருதுகிறேன். இங்குதான் கலாபூர்வமான வாழ்க்கைப் பிரதிபலிப்பே அதன் விமர்சனமாக மாறுகிறது.