நோபல் பரிசு பெற்ற எர்னெஸ்ட் ஹெமிங்வேயின் ஆகப் புகழ்பெற்ற நாவல் இது. ஒரு மனிதனுக்கும் மீனுக்குமிடையே நடைபெறும் உயிர்ப்போராட்டத்தைக் காவியச் சுவையுடன் சித்திரிக்கிறது இந்நூல். அழகிய கோட்டோவியங்கள் இடம்பெற்றுள்ளன. எர்னெஸ்ட் ஹெமிங்வே: எர்னெஸ்ட் ஹெமிங்வே (1899 – 1961) அமெரிக்க இல்லினாய் மாநிலத்தில் பிறந்தார். இளவயதிலேயே பேனாவையும் துப்பாக்கியையும் பயன்படுத்தத் தொடங்கிவிட்டார். முதல் உலகப் போரின்போது செஞ்சிலுவை சங்கத்தில் சேர்ந்து இத்தாலி சென்று பல விபத்துக்களில் சிக்கி அதிசயமாக உயிர்தப்பினார். செய்தி நிருபராக ஐரோப்பா முழுவதும் சுற்றினார். மாட்டுச் சண்டை, வேட்டையாடுதல், ஆழ்கடல் மீன்பிடிப்பு, குத்துச்சண்டை போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபட்டதுடன் அவற்றைப் பின்னணியாகக் கொண்ட நாவல்கள், சிறுகதைகள் எழுதினார். இரண்டாம் உலகப் போரின்போது போர்முனைகளில் முன்னணியில் நின்று செய்திகள் சேகரித்தார். அமெரிக்காவுக்காக உளவு பார்த்தார். ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, ஆப்பிரிக்கா என்று நிறைய சுற்றினார். நான்கு முறை திருமணம் செய்துகொண்டார். 1954இல் ஹெமிங்வேக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. For Whom the Bell Tolls, A Farewell to Arms, The Sun Also Rises, The Old Man and the Sea போன்ற நாவல்கள் திரைப்படங்களாக்கப்பட்டுள்ளன. 1961இல் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.