விபர சூட்சுமங்களோடும் அதன் அடுக்குகளோடும் தனக்கு முற்றாகத் தெரிந்த ஒரு அனுபவ உலகத்தையே மீரான் வெளிபடுத்துகிறார். அறிந்தவற்றை மட்டுமே சொல்வதும் ஒரு தமிழ் அதிசயம்தான். வாழ்வின் சகல மண்டலங்களையும் கற்பனையின் வீச்சில் அள்ளலாம் என்று, கள ஆராய்ச்சிகளுக்கு அகப்படாத வாழ்க்கைச் சூட்சுமங்கள் எதுவும் இல்லை என்று கொள்ளும் நம்பிக்கைக்கு எதிர்நிலை இது. மீரானின் அனுபவ உலகம் பொதுவான தமிழ்ப் படைப்புகளின் தரங்களுக்கு அப்பால் கரடுமுரடானது. முள்ளும் புதரும் விஷச் செடிகளும் கொண்ட காடு போல் கிடக்கிறது அது. ஆனால், முட்செடிகளும் பூக்கின்றன. பூக்களைச் சொல்ல முட்களை மறைக்க வேண்டியதில்லை. அறிந்துகொள்ள வேண்டிய மனிதத் தேவையின் முன் பூக்களுக்கு நிகரான இடம் முட்களுக்கும் உண்டு. நம் பொய்முகங்களுக்கு இவர் எழுத்து மூலம் ஒரு சில அடிகளேனும் விழுந்திருக்கின்றன. அந்த அளவுக்கு நல்லது. தத்துவவாதிகளின் சமூகக் கருத்துகளை நிரூபித்துக் காட்ட இவர் தன் அனுபவங்களைப் பயன்படுத்துவதில்லை. தன் அனுபவங்களைக் கலைரீதியான பரிசோதனைக்கு உட்படுத்தும்போது மேலெழுந்துவரும் உணர்வுகள் மனித உரிமைகள் மீது இவர் கொள்ளும் நம்பிக்கையை வெளிப்படத்துகின்றன். இவ்வகையான உணர்வுகளை உள்ளடக்கிய படைப்புதான் முற்போக்கு இலக்கியத்தின் அசல் என்று சொல்ல வேண்டும். தோப்பில் முஹம்மது மீரான்: தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.