சாகித்ய அகாதெமி விருது பெற்றுள்ள சா. கந்தசாமியின் முதல் நாவல் ‘சாயாவனம்’. ஆங்கிலத்திலும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இந்த நாவல், வீடியோ படமாகவும் வெளிவந்துள்ளது. இப்போது காலச்சுவடு பதிப்பகத்தின் கிளாசிக் வரிசையில். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன், சுற்றுச்சூழல் பற்றி அதிகமும் பேசப்படாத காலத்தில், இயற்கையுடனான மனிதனின் போராட்டத்தை மையமாக வைத்து, தஞ்சை மாவட்டக் கிராமியப் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல், இன்றைய சூழலுக்கும் பொருத்தமான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. “ஒன்றையழித்து ஒன்றாக, புதுயுகமென மாறிமாறி முகம் காட்டி முன்னகர்ந்தபடி இருக்கிறது காலம். ஒன்று அழிந்து இன்னொன்று தோற்றம் கொள்கிறது. ‘சாயாவனம்’ நாவல் அழியாத ஒரு குறியீடாக அதைச் சுட்டிக்காட்டியபடி நிற்கிறது” என்கிறார் முன்னுரையில் பாவண்ணன். சா. கந்தசாமி: சா. கந்தசாமி (1940) தஞ்சை மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தார். 25வது வயதில் ‘சாயாவனம்’ நாவலை எழுதினார். 1969இல் வெளிவந்தது. 150க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் 11 நாவல்களையும் எழுதியிருக்கிறார். நுண்கலைகள், ஆவணப் படங்களில் ஆர்வம் கொண்டவர். சுடுமண் சிலைகள் பற்றிய இவரது ஆவணப் படம் சர்வதேச விருது பெற்றது. ‘சாயாவனம்’ மற்றும் இவரது ‘சூரிய வம்சம்’, ‘விசாரணைக் கமிஷன்’ ஆகியவை ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. ‘விசாரணைக் கமிஷன்’ நாவலுக்காக 1998இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது. தற்போது சென்னையில் வசித்து வருகிறார். ஈ மெயில் முகவரி:sakandasamy@gmail.com