பேரும் பெருமையும் மனிதர்களின் ஆள்மனத்தில் உறங்கும் விருப்பங்கள். ஒரு சிலர் அவற்றை நேர்மையான உழைப்பின் வழியாக அடைந்து மகிழ்கிறார்கள். அதே நேரத்தில் உழைப்புச் சோம்பேறிகளும் ஊக்கமற்றவர்களும் அவற்றைக் குறுக்குவழியில் அடைந்து முன்வரிசைக்கு வந்து நின்றுவிடுகிறார்கள். சமூகத்தில் அவர்களுடைய பிம்பங்கள் நாள்தோறும் ஊதிப் பெருக்கப்படுகின்றன. என்றேனும் ஒருநாள் மனசாட்சி கேள்விக்கணைகளைத் தொடுக்கும் தருணத்தில் அவர்களுடைய பிம்பங்கள் சிதைந்து மண்ணோடு மண்ணாகிப் போகின்றன. மாபெரும் நாவலொன்றை ஆங்கிலத்தில் எழுதி வெற்றியும் புகழும் பெற்றவளாக உலகத்தாரால் பாராட்டப்படும் மஞ்சுளா நாயக்கை நோக்கி அவளுடைய மனசாட்சி எழுப்பும் தீவிரமான கேள்விகள் வழியாகவும் அவள் வழங்கும் பதில்கள் வழியாகவும் விரிவடைகிறது நாடகம். ஒரு கட்டத்தில் நெருப்புப் பிடித்த கூரை சரிந்துவிழுவதுபோல மஞ்சுளா நாயக்கின் பிம்பமும் பெருமையும் சிதைந்து சரிகிறது. அக்காட்சியை அருமையான நாடகத்தருணமாக மாற்றியுள்ளார் கிரீஷ் கார்னாட்.