கிராமத்தில் பிறந்து வளர்ந்தவனுக்கு அக்கிராமம் நிறையக் கதைகளை அவனுக்குக் கொடுத்திருக்கும். அப்படியான கதைகளில் ஒன்று தான் ‘திருவிழா’ நாவல். சிவகங்கை மாவட்டம் தான் கதைக்களம். பிரிந்த குடும்பங்கள்; அவர்களின் வாழ்க்கை, கிராமத்தில் நடக்கும் திருவிழா என பல்வேறு விஷயங்களை நாவலில் பேசியிருக்கிறேன். நாவலில் வரும் கதாபாத்திரங்கள் பெரும்பாலும் எங்கள் ஊரில் நான் பார்த்து வளர்ந்த, இப்போது பார்த்துக் கொண்டிருக்கிற வெள்ளந்தி மனிதர்களின் குணநலன்களையே ஒத்திருப்பார்கள். இவர்கள் எல்லாருமே அரிதாரம் பூசாதவர்கள். எதையும் மனதில் வைத்துக் கொள்ளாதவர்கள் என்றாலும் அண்ணன்-தம்பி, அங்காளி-பங்காளி பகைகளைத் தூக்கிச் சுமப்பவர்கள்தான். அடி பைப்பில் தண்ணீர் அடிக்கும்போது லேசாகச் சிதறும் தண்ணீரால் கூட உறவுகளை முறித்துக் கொள்ளும் மனுஷிகளை பார்த்து வளர்ந்தவன் என்பதால், அவர்களை என்னுடைய கற்பனைக் கதாபாத்திரங்களின் குணத்துக்குப் பயன்படுத்தியிருக்கிறேன். நாவலின் நீளம் கருதி சிலவற்றை குறைத்துள்ளோம். இருப்பினும் நாவலின் பக்கங்கள் கூடுதலாகவே இருக்கிறது.