ஒவ்வொரு வாழ்வும் அதற்கேற்ற விளைவுகள், அலைவுகளைக் கொண்டவை. கடலில் பேரலைகளெனில் குளத்தில் சிற்றலைகள். மகிழ்வோ அதற்கான எத்தனங்களோ அதனடியில் எப்போதும் கண்ணீர்ச் சுவடுகளுடன் பிணைந்துள்ளன. ஒளிரும் மகுடங்களின் மீதும் தூசு படிவதில்லையா? அவ்வாறு ஒளிர்ந்த காலத்தையும் அதன்மீது தூசுபடிந்த காலத்தையும் இதயத்தின் துடிப்போடு வடித்திருக்கிறார் தோப்பில். எவ்வளவோ பாதுகாப்பாய் நிறுவப்பட்ட துறைமுகத்தினுள்ளே அலைகள் புரள்வதை, அது ஒலிப்பதைப் படைப்பாக்கியதில் இந்நாவல் முன்னிற்கிறது. தோப்பில் முஹம்மது மீரான்: தோப்பில் முஹம்மது மீரான் (1944 – 2019) குமரி மாவட்டத்தின் கடற்கரைக் கிராமமான தேங்காப்பட்டணம் இவரின் சொந்த ஊர். தந்தை முஹம்மது அப்துல் காதர். தாயார் முஹம்மது பாத்திமா. தோப்பு என்பது இவரின் வீட்டுப் பெயர். தேங்காப்பட்டணம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அம்சி உயர்நிலைப் பள்ளியிலும், நாகர்கோவில் தெ.தி. இந்துக் கல்லூரியிலும் கல்வி பயின்றார். தமிழ் தாய்மொழி. கல்வி பயின்றது மலையாளத்தில். தமிழில் ஆறு நாவல்களும் ஏழு சிறுகதைத் தொகுப்புகளும், மலையாளத்தில் இரண்டு நாவல்களும் மலையாளச் சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு நூல் ஒன்றும் வெளி வந்துள்ளன. சாகித்திய அகாதெமி விருது உட்பட பல்வேறு விருதுகள் பெற்றிருக்கிறார். ‘ஒரு கடலோர கிராமத்தின் கதை’யின் ஆங்கில மொழிபெயர்ப்பு ‘Crossword Book Award’க்குப் பரிந்துரை செய்யப்பட்டது. தோப்பில் முஹம்மது மீரான் 10.05.2019 அன்று திருநெல்வேலியில் காலமானார். மனைவி: ஜலீலா. மகன்கள்: ஷமிம் அகமது, மிர்ஷாத் அகமது.