நாகம்மாள் என்னும் பாத்திரத்தை மையமாகக்கொண்ட இந்த நாவல், பெண்ணைச் சுயசிந்தனையும் செயல்பாடும் உடையவளாகப் படைத்த விதத்தில் முதன்மைத் தன்மை வாய்ந்தது. தமிழின் தொடக்க நாவல்கள் பெரும்பாலும் பெண்களையும் அவர்கள் பிரச்சினைகளையும் பற்றியவையே. ஆனால் அவற்றில் வரும் பெண்களுக்குச் சுய முகம் எதுவுமில்லை. ஆண்கள் பரிதாபப்பட்டு வழங்கும் அடையாளங்களைத் தரித்தவர்களாகவே அவர்கள் உள்ளனர். நாகம்மாளை அந்த வரிசையில் சேர்க்க முடியாது. தன் சுதந்திரத்திற்காகவும் எதிர்காலத்திற்காகவும் தன் சக்திக்கு உட்பட்டுக் கலகத்தைத் தோற்றுவிக்கும் இயல்புடையவளாக நாகம்மாள் விளங்குகிறாள். ஆர். ஷண்முகசுந்தரம்: ஆர். ஷண்முகசுந்தரம் (1917 – 1977) திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டத்தில் உள்ள கீரனூர் என்னும் சிற்றூரில் பிறந்தவர். ‘மணிக்கொடி’ இதழில் சிறுகதை எழுத்தாளராக அறிமுகமானார். 1942இல் ‘நாகம்மாள்’ நாவலை எழுதினார். ‘பூவும் பிஞ்சும்’, ‘பனித்துளி’, ‘அறுவடை’, ‘தனிவழி’, ‘சட்டி சுட்டது’, உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட நாவல்களையும் பல சிறுகதைகளையும் எழுதியுள்ளார். வசன கவிதை, நாடகம், கட்டுரைகள், மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் இயங்கியவர். ‘பதேர் பாஞ்சாலி’ உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட நாவல்களை மொழிபெயர்த்துத் தமிழுக்குத் தந்துள்ளார். ‘நாகம்மாள்’ மூலம் தமிழின் வட்டார நாவல் துறையைத் தொடங்கிவைத்த இலக்கிய முன்னோடி இவர். தன் தம்பி ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து பல்வேறு இலக்கியச் செயல்பாடுகளில் ஈடுபட்டார். ‘வசந்தம்’ என்னும் இலக்கிய இதழைப் பல்லாண்டுகள் நடத்தினார். புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம், புதுமலர் அச்சகம் ஆகியவையும் இவர்கள் நடத்தியவை. இவரது மனைவி: திருமதி வள்ளியம்மாள்.