வேடிக்கை கதையாகச் சொல்லப்பட்ட குடும்பப் புராணம் ‘பாத்துமாவின் ஆடு’. ஆனால் வைக்கம் முகம்மது பஷீர் எழுதியவற்றில் பல அடுக்குகளில் புரிந்துகொள்ளப்பட வேண்டிய நாவலும் இதுதான். அன்பின் பெயரால் மையப்பாத்திரத்தைச் சுரண்டும் உறவுகளின் வலை, பெண்களின் உலகத்துக்குள் நிலவும் பூசல்களின் சிக்கல், மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான சார்புநிலை உறவு, வாழ்க்கைக்கும் இலக்கியத்துக்குமான பிணைப்பின் வலு, நகைச்சுவையின் மிளிரல் என எந்த அடுக்கிலிருந்தும் இதை அணுகலாம். பஷீரின் இலக்கியத்தில் மனிதர்களுக்கு மட்டுமல்ல பறவைகளுக்கும் விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் இடமுண்டு. மனிதர்களுக்கு இயற்கையின் உயிர்தரிப்புக் குணத்தையும் ஜீவராசிகளுக்கு மனித சுபாவத்தையும் வழங்குகிறது பஷீரின் படைப்பாளுமை. தன்னை மையமாக வைத்து வீட்டுக்குள் ஓர் உலகை உருவாக்குகிறார். அது உம்மிணி வலிய வீடு அல்லது மிகவும் சின்னப் பிரபஞ்சம். இது பஷீர் மட்டுமே உருவாக்கக்கூடிய கதா பிரபஞ்சம். வைக்கம் முகம்மது பஷீர்: வைக்கம் முகம்மது பஷீர் (1908 – 1994) 1908 ஜனவரி 19ஆம் தேதி கேரளா வைக்கம் தாலுகாவில் தலையோலப் பரம்பில் பிறந்தார். பத்தாம் வகுப்பு படிக்கும்போது வீட்டைவிட்டு ஓடி, இந்திய தேசியக் காங்கிரஸில் சேர்ந்து உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்துகொண்டார். சுதந்திரப் போராட்ட வீரராக சென்னை, கோழிக்கோடு, கோட்டயம், கொல்லம், திருவனந்தபுரம் சிறைகளில் தண்டனை அனுபவித்தார். பகத்சிங் பாணியிலான தீவிரவாத அமைப்பொன்றை உருவாக்கிச் செயல்பட்டார். அமைப்பின் கொள்கை இதழாக ‘உஜ்ஜீவனம்’ வார இதழையும் தொடங்கினார். பத்தாண்டுகள் இந்தியாவெங்கும் தேசாந்திரியாகத் திரிந்தார். பிறகு ஆப்பிரிக்காவிலும் அரேபியாவிலும் சுற்றினார். இக்காலகட்டத்தில் பஷீர் செய்யாத வேலைகளே இல்லை. ஐந்தாறு வருடங்கள் இமயமலைச் சரிவுகளிலும் கங்கையாற்றின் கரைகளிலும் இந்து துறவியாகவும் இஸ்லாமிய சூஃபியாகவும் வாழ்ந்தார். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான மத்திய, மாநில அரசுகளின் ஓய்வூதியம், சிறப்பு நல்கை, இந்திய அரசின் பத்மஸ்ரீ விருது, கோழிக்கோடு பல்கலைக்கழகத்தின் டி.லிட்., சம்ஸ்கார தீபம் விருது, பிரேம் நசீர் விருது, லலிதாம்பிகா அந்தர்ஜனம் விருது, முட்டத்து வர்க்கி விருது, வள்ளத்தோள் விருது, ஜித்தா அரங்கு விருது போன்ற பல்வேறு விருதுகள் பெற்றவர். 1994 ஜூலை 5ஆம் தேதி காலமானார். மனைவி: ஃபாபி பஷீர், மக்கள் : ஷாஹினா, அனீஸ் பஷீர்.