மைய நீரோட்டம் எனச் சொல்லப்படும் உலகில் இருப்பவர்கள் நுழையத் தயங்குகிற சாம்பல் உலகத்தில் வெளிச்சத்தைத் தேடுகிற நாவல் இது. அவர்களுக்கான காரணங்களையும் நியாயங்களையும் அவர்களது பின்புலத்தில் வைத்துப் பார்க்கிறது. இந்தச் சாம்பல் நிற உலகத்தில் யார் யாரெல்லாம் குற்றவாளிகள், குற்றம் என்றால் என்ன என்பது குறித்த கேள்விகளையும் எழுப்புகிறது. நகரத்தின் வளர்ச்சிப் பசி தின்று தீர்த்த அந்த உலகத்தின் யதார்த்தங்களையும் விழுமியங்களையும் தேடிச் சென்னையின் சந்துகளில் நம்மைப் பயணிக்க வைக்கிறது. இதில் வசிப்பவர்கள் சென்னையின் வளர்ச்சிக்குத் தங்கள் வாழ்க்கையை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். குற்றங்களும் உதிரித் தொழில்களும் மட்டுமல்ல அவர்கள் வாழ்க்கை. அவர்களுக்கும் முன்னேற வேண்டும் என்னும் ஆசை உண்டு, கடவுளர்கள் உண்டு, உறவுகளும் லட்சியங்களும் உண்டு. ‘பொன்னகரம்’ வெளியில் இருப்பவர்களுக்கு ஒரு சிறிய காலனி. ஆனால் அவர்களைப் பொருத்தவரை அது ஒரு ஊர். அந்த ஊரின் பொதுத்தன்மை சாம்பல் நிறம். அந்தச் சாம்பல் நிறப் புகைக் கூட்டத்தை விலக்கி அந்த ஊரின் தரிசனத்தை அரவிந்தன் காட்டுகிறார். உங்களை இன்னொரு உலகத்திற்கு அழைத்துச் செல்லும் இந்நாவல் ஒரு கட்டத்தில் உங்களையும் அந்த உலகத்தின் கதாபாத்திரங்களாக மாற்றிவிடலாம். Ponnagaram portrays a Chennai unknown to many, sheds light on the grey areas of north Chennai that people accustomed to mainstream expressions are unaware of. The rules of this world might be strange to them. The novel portrays its protagonists reasonings and virtues from their perspective. It questions who are, why they are ‘criminals’ and what is ‘crime’. It takes us on a journey through Chennai’s labyrinthine lanes, talks of the reality and values devoured by the development hungry city, talks of the Gods, Ambitions, Dreams of the people who’ve lost their lives as price for the ‘development’. Aravindan in his second novel takes us through ponnagaram, reveals us past the grey clouds surrounding it. More than just the journey, it makes the reader feel themselves as another character in Ponnagaram. அரவிந்தன்: அரவிந்தன் (பி.1964) இதழாளர், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். இதழியல் துறையில் முப்பதாண்டுக் கால அனுபவம்கொண்டவர். இந்தியா டுடே, காலச்சுவடு, சென்னை நம்ம சென்னை, நம் தோழி ஆகிய இதழ்களில் பணியாற்றியுள்ளார். தி இந்து தமிழ் நாளிதழின் இணைப்பிதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். இலக்கியம், தத்துவம், பெண்ணுரிமை, அரசியல், மொழி, திரைப்படம், கிரிக்கெட் ஆகியவற்றைக் குறித்த கட்டுரைகளை எழுதிவருகிறார். சிறுகதைகள், நாவல், இலக்கிய விமர்சனக் கட்டுரைகள், அரசியல் விமர்சனம், மொழிபெயர்ப்பு, மகாபாரதச் சுருக்கம், திரைப்படம், கிரிக்கெட் குறித்தவையென இதுவரை பதினைந்துக்கும் மேற்பட்ட நூல்கள் வெளியாகியுள்ளன. தற்போது டைம்ஸ் ஆஃப் இந்தியா குழுமத்தின் ‘சமயம் தமிழ்’ என்னும் இணையதளத்தின் ஆசிரியராகப் பணியாற்றிவருகிறார். இதழியல் பயிற்சி வகுப்பு நடத்திய அனுபவமும் இவருக்குண்டு. தற்போது லயோலா கல்லூரியில் வருகைதரு விரிவுரையாளராக இதழியல் மாணவர்களுக்குப் பாடம் எடுத்துவருகிறார். விருதுகள் · தமிழ்ப் புத்தக நண்பர்கள் நடத்தும் மாதாந்தர விமர்சனக் கூட்டத்தில் இமையத்தின் படைப்புகள் குறித்து ஆற்றிய உரைக்கு 2016-17ஆம் ஆண்டுக்கான ‘ஆண்டின் சிறந்த உரை’ விருது. · பால சரஸ்வதி மொழியாக்க நூலுக்கு ‘கனடா இலக்கியத் தோட்டம்’ வழங்கும் ‘சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது (2017).’