யுத்தங்கள் பற்றிய பேச்சு இருந்தாலும் இது யுத்தங்களை மையமாகக்கொண்ட நாவல் அல்ல. இது அடிப்படையில் ஒரு குடும்பத்தின் கதை. விரிவானதும் சிக்கலானதுமான உறவுச் சங்கிலியால் கோர்க்கப்பட்ட ஒரு குடும்பத்தின் அறுபது ஆண்டுக் கதை. வியப்பும் வேதனையும் விரக்தியும் பரவசமும் கொண்ட வாழ்வு காலத்தினூடே பயணிக்கிறது. காலமே அதை வழிநடத்திச் செல்கிறது. மாற்றங்கள் அவை நடக்கும் காலத்தில் முழுமையாக உணரத்தக்கவையாக இல்லை. மாற்றங்களின் வெளிப்பாடுகளை அவற்றின் வேர்களோடு தரிசிக்கச் செய்வது புனைவின் பெரும்கொடை. அந்த அற்புதமான அனுபவத்தை இந்த நாவலில் பெறலாம். மேலெழுந்தவாரியாகப் பார்க்கும்போது ஒரு குடும்பத்தின் கதையாக இருக்கும் கதை சற்றே உன்னிப்பாகக் கவனிக்கும்போது ஒரு காலகட்டத்தின் கதை யாகவும் மனிதர்களின் கதையாகவும் வாழ்க்கையும் உறவுகளும் மாறிவரும் விதம் குறித்த தரிசனமாகவும் விகாசம் பெறுவதை உணரலாம். கதை நிகழும் களம் இருபதாம் நூற்றாண்டின் அறுபது ஆண்டுகள். உலகம் முழுவதும் பெரும் கொந்தளிப்புகளும் மாபெரும் மாற்றங்களும் நிகழ்ந்த காலகட்டம். காலனி ஆதிக்கத்தின் தாக்கமும் அதிலிருந்து விடுபடும் திமிறலும் நிரம்பிய இந்தக் காலகட்டத்தில்தான் இந்திய வாழ்வு நவீனத்துவத்துடனான தன் போராட்டத்தையும் மேற்கொண்டது. இந்தப் போராட்டம் தனி மனித வாழ்வையும் குடும்ப வாழ்வையும் சமூக வாழ்வையும் மதிப்பீடுகளையும் பெருமளவில் மாற்றி அமைத்தது. வேரிலிருந்து முற்றாக வெட்டிக்கொண்ட மாற்றங்களும் வேர்களின் தன்மைகளை உள்வாங்கிய மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தின் பெரும் சலனங்களை ஒரு குடும்பத்தின் பின்னணியில் வைத்து நமக்குக் காட்டுகிறது அசோகமித்திரனின் கலை. பிரகடனங்கள் அற்ற இயல்பான வெளிப்பாடாக அமைந்துள்ளதே அசோகமித்திரனின் கலையின் சிறப்பு. அந்தச் சிறப்பை இந்த நாவலிலும் உணரலாம். அசோகமித்திரன்: அசோகமித்திரன் (1931-2017) இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார். மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப்பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக்கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.