காதலில் ஆண் ஒரு பயணி. பெண்ணைப் பற்றிக்கொண்டு பிராயங்களின் விளிம்புகளில், பிறவிகளின் புதிர்களில், கனவுகளின் உலகில், நிலங்களின் விஸ்தீரணங்களில் அலைந்துதிரியும் ஒரு வெறிகொண்ட பயணி. பெண் காதலில் ஒரு நிலை. அவள், அதில் ஒன்று பயணம் அல்லது பாதை. இந்தத் தொகுப்பிலுள்ள நான்கு சிறு நாவல்களும் பிரதானமாகக் காதலின் தீவிரத்தை வெவ்வேறானவையும் ஆபத்தானவையுமான மனவுலகங்களினால் சொல்ல முயல்பவை. பா. வெங்கடேசன்: பா. வெங்கடேசன் எண்பதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கியவர்; மதுரையில் பிறந்து கல்லூரிக் காலம்வரை அங்கேயே வளர்ந்தவர். மனைவி, இரண்டு மகன்களுடன் பணி நிமித்தமாக இப்போது ஒசூர்வாசி. வாகனங்களுக்கான பிளாஸ்டிக் உதிரிப் பாகங்கள் உற்பத்தி செய்யும் பிரபல தனியார் தொழில் நிறுவனத்தின் நிதிப் பிரிவில் மேலாளர். கவிதைகள், சிறுகதைகள், குறுங்கதைகள், சிறு புதினங்கள், புதினங்கள் படைப்பாய்வுக் கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் ஆகியவை பதிப்பிக்கப்பட்டவையும் படாதவையும் படவிருப்பவையுமாக நவீனத் தமிழ் இலக்கியத்திற்கு இவருடைய பங்களிப்புகள். புனைவிலக்கியத்தில் சீரிய பங்களிப்பிற்காக ‘ஸ்பாரோ’, ‘தமிழ் திரு’, ‘விளக்கு’ ஆகிய விருதுகளைப் பெற்றவர்.