காம்யூ (கமுய்) உயிருடன் இருந்தபோதே வெளியான கடைசிப் படைப்பான இப்புதினம், மனிதர்கள் எதிர்கொள்ளும் வாழ்வியல் சிக்கல்களையும் அவற்றிலிருந்து விடுபடக் கையாளும் உத்திகளையும் உளவியல் பார்வையில் அணுகுகிறது. தான் இழைத்த தவறுக்குத் தார்மீகப் பொறுப்பேற்கும் ஒருவன் அதற்கான தண்டனையினைக் கோருவதையும் தன்னையே நீதிபதியாகப் பாவித்து சுய விசாரணை செய்வதையும் புதியதொரு கோணத்தில் அலசும் படைப்பு இது. மனித மதிப்பீடுகளை மையமாகக் கொண்ட இப்புதினத்தில் வரலாற்று நிகழ்வுகள், சமயம், சமூக அமைப்புகள், மனித இயல்புகள் எனப் பலவும் விவாதப்பொருளாகி நம் சிந்தனைவெளியினை விரிவாக்குகிறது. இதன் மூலம் ஆழமான வாசிப்பு அனுபவத்தையும் இப்புதினம் வழங்குகிறது.