ஒரு பெரிய நகரத்தில் இளமைப் பருவத்தைக் கழித்த ஒவ்வொருவரும், தம்முடைய சொந்த அல்லது சமூக அனுபவங்களுக்கும் அந்நகரத்தின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடங்கள், பஜார்கள், வீதியமைப்புகள், மக்களின் இயல்புகள் ஆகியவற்றுக்குமிடையே இதே விதமான சம்பந்தத்தை உணர்ந்திருக்கக்கூடும். இந்தச் சம்பந்தம் இந்த நாவலில் பதிவாகியிருப்பதுபோல வேறு எந்தத் தமிழ் நாவலிலும் நான் பார்த்ததில்லை. அசோகமித்திரன்: இயற்பெயர் ஜ. தியாகராஜன். செகந்தராபாத்தில் பிறந்தார் மெஹ்பூப் கல்லூரியிலும் நிஜாம் கல்லூரியிலும் ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் படித்தார். தந்தையின் மறைவுக்குப் பின் இருபத்தொன்றாம் வயதில் குடும்பத்துடன் சென்னைக்குக் குடியேறினார். கணையாழி மாத இதழின் ஆசிரியராக பல ஆண்டுகள் பணியாற்றினார். 1951 முதல் தமிழிலும் ஆங்கிலத்திலும் எழுதினார். சிறுகதை, குறுநாவல், நாவல், கட்டுரை, விமர்சனம், சுய அனுபவப் பதிவு போன்ற பிரிவுகளில் 60 நூல்களுக்கு மேல் எழுதியிருக்கிறார். பல இந்திய மொழிகளிலும் சில ஐரோப்பிய மொழிகளிலும் இவரது நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. 1973இல் அமெரிக்காவின் அயோவா பல்கலைக் கழகத்தின் எழுத்தாளர்களுக்கான சிறப்புப் பயிலரங்கில் கலந்துகொண்டவர். 1996ஆம் ஆண்டு சாகித்திய அக்காதெமி விருது பெற்றார். அசோகமித்திரன் தனது 85வது வயதில், 23.03.2017 அன்று சென்னை வேளச்சேரியில் காலமானார். மனைவி: ராஜேஸ்வரி. மகன்கள்: தி. ரவிசங்கர், தி. முத்துக்குமார், தி. ராமகிருஷ்ணன்.